திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: பால கவுதமன்
திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: பால கவுதமன்
ADDED : ஜன 07, 2026 04:29 AM

சென்னை: ''ராமன் யார், ராவணன் யார் எனத் தெரியாமலே, காஞ்சி சங்கரமடத்தை அழித்து, ராவணக் கோட்டம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள, 'மே 17' இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்,'' என, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய நிறுவனர் பால கவுதமன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
'ஜன., 22ம் தேதி ராவணக்கோட்டம் அமைக்க, காஞ்சிபுரம் செல்லப் போகிறேன்' என, திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார். அது மட்டுமின்றி, '2026 புத்தாண்டில் ராவண கோட்டம் அமையட்டும். அதற்கான மாதிரி உருவங்களை இணையதளத்தில் பதிவிடுங்கள். சங்கரமடத்தை ஒழித்து, ராவணக் கோட்டம் அமைக்க உள்ளோம்' என, கிளம்பி உள்ளார்.
இதேபோல் வேறு ஒரு அமைப்பும் அறிவித்தது. ஆனால், எந்த போராட்டமும் நடத்தவில்லை. நமக்குள் உள்ள கேள்வி ராவணன் யார் என்பதுதான். இது குறித்த அடிப்படை கூட தெரியாமல் பேசுகின்றனர். ராவணன் யார் என்றால், விஸ்வரஸ் ரிஷிக்கும், கைகசிக்கும் பிறந்தவர். விஸ்வரஸ் ரிஷி என்பவர் பிராமண மகரிஷி. அவர், உத்தரப் பிரதேசத்தில் பிறந்தார்.அங்கு அவர் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
கைகசி யார் என்றால், காசியபமுனிவர் மனைவி திதியின் வம்சத்தில் வந்தவர். இவர்கள் தமிழர்கள் அல்ல. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். ஆனால், திருமுருகன் காந்தி போன்றவர்களுக்கு, எப்படி பெரும் பாட்டன் ஆனார் எனத் தெரியவில்லை. இது, தமிழ் உணர்வை வைத்து, அரசியல் செய்யக்கூடிய கீழத்தரமான கூட்டம்.
ராமன் யார் என்றால், திராவிட தேசத்து ராஜாவான சத்தியவிரதன் மகன் இஷ்வாகு வழி வந்தவர். சத்தியவிரதன் கிருதமாலா நதிக்கரையில் அமைந்துள்ள நகரை ஆண்டார். இது வைகையின் கிளை நதி. முதலில் ராமன் யார், ராவணன் யார் என்ற அடிப்படை கூட தெரியாமலேயே ராவணக் கோட்டம் அமைக்கக் கிளம்பி உள்ளனர்.
ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதுதான், இவர்களின் நோக்கம். மக்கள் ராமனை கும்பிடுகின்றனர். அதனால், இவர்கள் ராவணனை கையில் எடுத்துள்ளனர். திருமுருகன் காந்தி உருவாக்கி உள்ள அமைப்பின் பெயர், 'மே 17' இயக்கம். மே 17ல் தான், கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அவருடைய ஒத்துழைப்பில் கொத்து கொத்தாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இதேபோல், தமிழகத்திலும் தமிழர்களை அழிப்பேன் என்கின்றனர். எதற்காக இதை செய்ய வேண்டும் என்றால், வடக்கு , தெற்கு என்ற மொழிப் பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக. ஒற்றுமையாக உள்ள பாரத நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சி.
நாட்டின் பண்பாடு, நம்பிக்கையை அழித்து விட்டால், அந்நிய தேசத்தவர், மீண்டும் பாரதத்தை கபளீகரம் செய்ய முடியும். அதற்காக, இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். சனாதன சங்கரமடத்தை ஒழிக்கப் போகிறோம் என்கின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி, அறநிலையத்துறை அமைச்சரை அருகில் வைத்துக் கொண்டே, 'சனாதனத்தை ஒழிப்போம்' எனப் பேசி உள்ளார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை. எனவே, தமிழக அரசின் கொள்கையை அமல்படுத்துகிறேன் எனக் கூறாமல் கூறி உள்ளனர்.
ஹிந்து மதத்தின் மீதான தாக்குதல்களையும், மொழி அரசியலையும், மொழி வன்மத்தையும், பிரிவினைவாதத்தையும், தி.மு.க., அரசு, தொடர்ந்து ஊக்குவி க்கிறது. அந்த அடிப்படையில் இதுபோன்ற போராட்ட அறிவிப்புகளை, திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ளார்.
இது ஹிந்து இன அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக பார்க்கப்பட வேண்டும். ஒரு மத நிறுவனத்தை இடித்துவிட்டு, மற்றொன்றை கட்டப்போகிறேன் என்பது மிரட்டல். இது ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் செயல். எனவே, அவர் மீது வழக்கு தொடர வேண்டும்.
நாட்டில் கலகத்தை ஏற்படுத்தும் அறிவிப்பின் கீழ், அவர் கைது செய்யப்பட வேண்டும். தொடர்ந்து இவர் இப்படி செய்வதால், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்.
மே 17 அமைப்பு, அரசு வளர்க்கக்கூடிய பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்பு. காஷ்மீரில் பரூக் அப்துல்லா, முப்தி முகமது கட்சிகள், பயங்கரவாத கட்சிகளை வளர்த்து, காஷ்மீரை சின்னாபின்னமாக்கின. அதே போலவே, தமிழகத்தில் மே 17 இயக்கத்தை, தி.மு.க., அரசு வளர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

