முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
UPDATED : ஜூன் 27, 2025 12:18 AM
ADDED : ஜூன் 26, 2025 02:01 AM

மதுரை: 'மழை விட்டாலும் துாவானம் விடாது' என்பது போல் மதுரையில் ஹிந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு முடிந்தாலும், அது ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழக அரசியலில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, 'இந்த ஆன்மிக மாநாடு தாக்கத்தை ஏற்படுத்தாது' என ஏளனம் பேசிய திராவிட கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் ஒருவிதமாக பேட்டி என்ற பெயரில் புலம்பி தள்ளி வருகின்றனர்.
திராவிட கட்சிகளை புலம்ப விடும் முருக பக்தர்கள் மாநாடு
பிரமாண்ட கட் அவுட், மிரட்டும் பேனர், சினிமா செட்டிங்கை மிஞ்சும் மேடை அமைப்பு, 'தலைவா...தலைவா...' என தொண்டை கிழிய கத்திக்கொண்டு போதையில் விசில் பறக்கவிடும் ஆதரவாளர்கள் கூட்டம் என்பதை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக மக்கள், மதுரையில் கட்டுக்கோப்பாக நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை பார்த்து, இது அல்லவா மாநாடு என பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.
'மாநாடு எப்படியும் சொதப்பி விடும்' என எதிர்பார்த்து காத்திருந்த திராவிடக் கட்சிகளுக்கு, மாநாட்டின் அடங்காத அதிர்வலைகள் மேலும் 'ஷாக்' கொடுத்துள்ளது. மாநாட்டில் பக்தர்கள் எழுப்பிய முருக கோஷம் விண்ணை முட்டியது போல் அதன் அதிர்வலைகள் பல அரசியல் கட்சித் தலைவர்களின் காதுகளை இன்னும் குடைந்துகொண்டுள்ளது என்பது தான் எதார்த்தம்.
பல்டியடித்த திருமாவளவன்
இதன் எதிரொலியாக தான், மாநாடு நடப்பதற்கு முன் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கட்சியினருடன் வி.சி., தலைவர் திருமாவளவன் தரிசனம் செய்து திரும்பும் போது, அவரிடம் ஒரு பக்த தம்பதி செல்பி எடுக்க கேட்டுக்கொண்ட போது, தன்னுடைய நெற்றியில் பூசியிருந்த திருநீறை அழித்துவிட்டு செல்பி எடுத்தார்.
இது குறித்து அன்று மாலையே நிருபர்கள் கேட்டபோது அவர், 'நாள் முழுவதும் திருநீறை வைத்துக்கொண்டிருக்க முடியுமா' என வீராப்பாக பதில் அளித்தார். ஆனால் பின்னர் மாநாட்டின் பிரமாண்டத்தை பார்த்து கிறுகிறுத்து போன திருமாவளவன், 'நான் திருநீறை அழிக்கவில்லை. வியர்வையை தான் துடைத்தேன்' என சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் கலாய்க்கும் வகையில் 'கண்டென்ட்' கொடுத்துவிட்டு தற்போது தவிக்கிறார்.
மாநாட்டில் பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'திருநீறை அழித்தவர்கள் தேர்தல் நேரத்தில் ஹிந்துக்களின் ஓட்டுக்களை பிச்சை கேட்டு வருவார்கள். அப்போது பார்த்துக்கொள்ளுங்கள்' என எச்சரித்தார். அதன் பின் தான் சுருதி இறங்கிய நிலையில், திருமாவளவன் 'ஸ்டண்ட்' அடித்தார்.
அமைச்சர்களின் 'சமாளிப்புகள்'
இவர் இப்படியென்றால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு பழநியில் நடத்தியது தான் உண்மையான ஆன்மிக மாநாடு; மதுரை முருக பக்தர்கள் மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ஏளனம் பேசிய தலைவர்கள், மாநாட்டிற்கு பின் டயலாக்கை மாற்றினர். தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, 'எங்க கட்சியிலும் தான் வேலு இருக்கிறார், முருகன் இருக்கிறார்' என சமாளிக்கிறார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி முருகன் எங்களிடம் இருக்கும் போது முருகனை வைத்து அவர்கள் (பா.ஜ.,) எப்படி அரசியல் செய்ய முடியும் என கேள்வி எழுப்பி முட்டுக்கொடுக்கிறார்.
'முருகனுக்கு நெருக்கமானவன் நான்; ஏனெனில் நான் வேலு' என்று கூறியிருக்கிறார் அமைச்சர் வேலு.
இதையெல்லாம் தாண்டி ஆர்.எஸ்.பாரதியுடன் இணைந்து அனுபவம் மிக்க அமைச்சர் தங்கம் தென்னரசு, நாங்கள் 100 மாநாடுகள் நடத்தி தி.மு.க.,வுக்கு சேர்க்க வேண்டிய ஓட்டுக்களை, ஒரே மாநாட்டில் சேர்த்துக்கொடுத்துள்ளனர் வார்த்தைகளை கொட்டியுள்ளனர்.இதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள். 'தி.மு.க., நடத்தும் 100 மாநாடுகளுக்கு ஹிந்து முன்னணி நடத்திய இந்த ஒரு மாநாடு இணையானது என ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது மாநாட்டில் தானாக கூடிய லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தின் பிரமாண்டத்தை கண்டு மிரண்டு போனார்களா' என கேள்வி எழுகிறது.
இதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோரை மாநாட்டில் விமர்சித்து விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடு. அ.தி.மு.க.,வில் உள்ள 'அண்ணா' என்பதை வைத்துக்கொள்வதற்கே தகுதியற்றவர்கள் என அமைச்சர் ரகுபதி கொந்தளித்தார்.அதேநேரம் கட்சியில் திராவிடம், அண்ணா என்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டு அ.தி.மு.க., பங்கேற்றதால் கொள்கை ரீதியான நெருக்கடிக்கும் அக்கட்சி ஆளாகியுள்ளது என்பதில் மாற்றமில்லை.
அமைச்சர்கள் விரக்தி
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில் மதுரை முருக பக்தர்கள் மாநாடு நாங்கள் எதிர்பார்த்ததை விட வெற்றி பெற்றுள்ளது. திராவிடக் கழகத்தை எதிர்த்து 45 ஆண்டுகள் அரசியல் செய்வது ஹிந்து முன்னணி என தெரிந்து தான் மாநாட்டில் மக்கள் கூடினர். கட்டுப்பாட்டை பார்த்து மக்கள், போலீசார் எங்களை பாராட்டினர். அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். பாரதி நினைப்பது போல் இது தி.மு.க.,விற்கு ஓட்டாகாது. அவர்கள் மாநாட்டு கூட்டத்தை பார்த்து விரக்தியில் பேசுகின்றனர் என்றார்.
முன்பு கந்த சஷ்டி கவசத்தை சிலர் அவமதித்த போது, எந்த கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இப்போது முருகன் மாநாட்டிற்கு பிறகு எல்லா கட்சிகளும் முருகன் எங்களுடனே உள்ளார் என்கின்றனர். மாநாட்டிற்கு முன்பு வரை, கலவரம் ஏற்படும் என்று பொதுமக்களிடம் பீதி கிளப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாட்டிற்கு பிறகு 'கப்சிப்' ஆகி விட்டன.
இப்படி மதுரை முருக பக்தர்கள் மாநாடு அரசியல் கட்சிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை கூறியது போல் முருகன் மாநாடுக்கு முன்; முருக மாநாடுக்கு பின் என தமிழக அரசியல் களம் மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.