திருவள்ளுவர் சிலை பெயர் மாற்றம் வேண்டாம்: இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்
திருவள்ளுவர் சிலை பெயர் மாற்றம் வேண்டாம்: இந்து தமிழர் கட்சி வேண்டுகோள்
ADDED : டிச 31, 2024 06:21 AM
சென்னை : 'கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை,'பேரறிவு சிலை' எனப் பெயர் மாற்றக் கூடாது' என, இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில், மூன்று கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடல் நடுவே, 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை நிறுவப்பட்டு பெருமைப்படுத்தியது பாராட்டுக்குரியது.
சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை, வெள்ளி விழாவாக கொண்டாடும் நேரத்தில், முதல்வர் ஸ்டாலின், இனி திருவள்ளுவர் சிலை, 'பேரறிவு சிலை' என அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
தி.மு.க., அரசின் முன்னோடிகள் தங்கள் உண்மையான பெயரை மறைத்து, புதுப்பெயர்களை சூட்டி, தமிழர்களை ஏமாற்றினர். அதுபோல், திருவள்ளுவருக்கு புதுப்பெயர் சூட்டி, உண்மையான வரலாற்றை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறோம்.
திருவள்ளுவருக்கு பேரறிவு எனப் பெயர் சூட்டினால், அண்ணாதுரையும், ஈ.வெ.ராமசாமியும் ஒன்றாக தமிழ் படித்தனர் என, புதிய புனைவு கதை கட்ட ஏதுவாக இருக்கும் என்று நினைக்கின்றனரோ என்னவோ தெரியவில்லை.
பேரறிவாளன் என்ற பெயர், முதல்வருக்கு பிடித்ததால் என்னவோ, இந்த பெயரை சூட்டுகிறாரா என்று சந்தேகிக்கிறோம். திருவள்ளுவர் சிலை என்பது திருவள்ளுவர் சிலை என்றே அழைக்கப்பட வேண்டும். பேரறிவு சிலை என அழைத்தால், அது ஒரு வரலாற்று அடையாள அழிப்பு. புதிய பெயர் சூட்டுதல், திராவிட மாடல் கருத்து திணிப்பு.
தமிழ் தேசிய அமைப்புகளும், ஹிந்து தேசிய அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும், இந்த பேரறிவு சிலை என்ற பெயர் மாற்ற அறிவிப்புக்கு, ஜனநாயக ரீதியில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.