'யுனெஸ்கோ' அங்கீகாரத்தை இழந்தது திருவிந்தளூர் செப்பேடு
'யுனெஸ்கோ' அங்கீகாரத்தை இழந்தது திருவிந்தளூர் செப்பேடு
ADDED : பிப் 22, 2026 01:53 AM

- நமது நிருபர் - 'யுனெஸ்கோ' எனப்படும், ஐ.நா.,வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்காததால், உலகின் மிகப்பெரிய திருவிந்தளூர் செப்பேடுகளுக்கான உலக அங்கீகாரம் பறிபோய் உள்ளது.
மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள திருவிந்தளூர் கைலாசநாதர் கோவில் வளாகத்தில், 12 அடி ஆழத்தில், கடந்த 2010, மே மாதம் கண்டெடுக்கப்பட்ட மிக முக்கிய ஆவணம், திருவிந்தளூர் செப்பேடுகள். 1058ம் ஆண்டைச் சேர்ந்த இச்செப்பேடுகளில், சோழ மன்னர் ராஜேந்திரன், அவரின் மகன்களான ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன் ஆகியோரின் தானம் குறித்த செய்திகள் உள்ளன.
புலி, மீன், வில் உள்ளிட்ட மூவேந்தர் மற்றும் சாளுக்கியர்கள், இலங்கை மன்னர்களின் சின்னங்களுக்கு மேல், வெண்கொற்றக்குடை முத்திரையுடன் கூடிய வளையத்தில் கோர்க்கப்பட்ட 86 ஏடுகளையுடையவை. இவற்றில் உள்ள ஒவ்வொரு ஏடும், 44 செ.மீ., நீளம், 21 செ.மீ., அகலம் உள்ளவை.
செப்பேடுகளில் முதல் பகுதி சமஸ்கிருதத்திலும், இரண்டாம் பகுதி தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. அந்தணர்களுக்கும், மற்ற குலக்குடிகளுக்கும் வழங்கிய ஊர் உள்ளிட்ட நிலதானம் குறித்த ஆவணமாக இது உள்ளது. இதில், சோழர் கால நில அளவை மற்றும் வரி வசூல் முறைகள், மானியம் மற்றும் துல்லியமான நில ஆவண பராமரிப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
இதில், சோழர்களின் பரம்பரை, போர் வெற்றிகள், சமூக, பொருளாதார நிலைகள் விளக்கப்பட்டுள்ளன.
உலகில் இதுவரை கிடைத்த செப்பேடுகளில், 150 கிலோ எடை, 86 ஏடுகள், 3,442 வரிகளை கொண்ட, பெரிய செப்பேடாக உள்ளது.
இதன் வரலாறு, தொல்லியல், பாரம்பரிய முக்கியத்துவம் கருதி, இதை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க, யுனெஸ்கோவுக்கு பரிந்துரைக்கும்படி, மத்திய கலாசார அமைச்சகத்துக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக அரசு கடந்த ஆண்டு கடிதம் அனுப்பியது.
அதற்கு விண்ணப்பிக்க, கடந்த ஆண்டு நவ., வரை அவகாசம் இருந்தது. எனவே, இந்த ஆண்டின் துவக்கத்தில், திருவிந்தளூர் செப்பேடுக்கு, 'யுனெஸ்கோ' அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மத்திய தொல்லியல் துறை, யுனெஸ்கோவிற்கு விண்ணப்பிக்கவே இல்லை என்ற தகவல், தற்போது வெளியாகி உள்ளது.
இது, தமிழக வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவிந்தளூர் செப்பேடு.

