ADDED : ஜன 05, 2024 07:15 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
சேலம், ஆத்துார் விவசாயிகள் ஜாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வட மாநிலத்தில் ஜாதியை, பெயரின் பின்னால் குறிப்பிடுவது வழக்கம். வடமாநில அதிகாரிகள் யாரேனும் விவசாயிகளின் பெயருக்கு பின், ஜாதி பெயரை குறிப்பிட்டு அனுப்பி இருக்கலாம். இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோல நடக்கக்கூடாது.
டவுட் தனபாலு:
வடமாநில அதிகாரிகளா இருந்தாலும், தாங்கள் பணியாற்றும் மாநிலத்தின் கலாசாரம், பண்பாட்டை தெரிஞ்சுக்கணும் அல்லது மாநில அதிகாரிகளிடம் கேட்டாவது தெரிஞ்சுக்கணும்... இல்லை என்றால், இப்படித்தான் ஏடாகூடமா மாட்டிட்டு முழிக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
---
பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன்:
பொள்ளாச்சி நகராட்சியில் எந்த பணியானாலும், கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் மட்டுமே நடக்கிறது. என் தொகுதி மேம்பாட்டு நிதியில், நகரில் ஐந்து இடங்களில் பயணியர் நிழற்கூரை அமைக்க, இரு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, இரு நிழற்கூரை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான பூமி பூஜையில் நகராட்சி அதிகாரிகள் யாருமே பங்கேற்கவில்லை.
டவுட் தனபாலு:
நீங்க நடத்துற பூமி பூஜையில அதிகாரிகள் பங்கேற்றா, நாளைக்கே அவங்க ராமநாதபுரத்துக்கோ, துாத்துக்குடிக்கோ துாக்கி அடிக்கப்படுவாங்களே... அப்ப, அவங்களை உங்களால காப்பாற்ற முடியுமா என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தாங்களேன்!
---
பா.ஜ.,வைச் சேர்ந்த ம.பி., முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்:
சில நேரங்களில் பட்டாபிஷேகத்துக்காக காத்திருக்கும் போது, வனவாசம் செல்ல வேண்டியிருக்கும். நான் எங்கும் செல்ல மாட்டேன். மத்திய பிரதேசத்திலேயே வாழ்ந்து, இங்கேயே என் உயிரை விடுவேன்.
டவுட் தனபாலு:
கிட்டத்தட்ட, 18 வருஷமா முதல்வர் பதவியில இருந்தவரை, கீழே இறக்கி விட்டதுல பயங்கர விரக்தியில இருப்பது நல்லாவே தெரியுது... 'பழையன கழிதலும்; புதியன புகுதலும் காலம் காலமாக நடப்பது தானே' என மனதை தேற்றி கொண்டால், மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!