''இது பங்காளி கூட்டணியல்ல; மாமன் - மச்சான் கூட்டணி'': உறவுக்கு அழைக்கிறார் அண்ணாமலை
''இது பங்காளி கூட்டணியல்ல; மாமன் - மச்சான் கூட்டணி'': உறவுக்கு அழைக்கிறார் அண்ணாமலை
ADDED : ஆக 20, 2024 05:31 PM

சென்னை: 'எங்கள் கூட்டணி பங்காளி கூட்டணி அல்ல, மாமன் - மச்சான் கூட்டணி. எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வரலாம்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: மக்கள் எல்லோரும் எங்களை விரும்புகின்றனர்; பா.ஜ., ஆட்சி வர வேண்டும் என நினைக்கின்றனர். எந்த பங்காளியுடனும் போகப்போவதில்லை. 2024ல் பா.ஜ.,வின் கூட்டணி மக்கள் முன்பு அற்புதமாக நிற்கின்றது. கூட்டாட்சி என சொல்லியாச்சு; பங்காளி என சொல்வதை விட எங்கள் கூட்டணி மாமன் - மச்சான் கூட்டணி. பங்காளிகள் வேண்டாம். அக்கா, தங்கை, மாமன், மச்சான் என எல்லோரும் இணைந்து தமிழகத்தை வளப்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கின்றது.
மாமன் - மச்சான் கூட்டணி என்றால் வேற்றுமையில் ஒற்றுமை. அதில் ஜாதி, மதம், இனம் கிடையாது. அதுவே பங்காளி என்றால் ஒரே இனம். எங்கள் கூட்டணிக்கு எல்லோரும் வரலாம். 2026 தேர்தலில் அரசியல் களத்தை இந்த மாமன் - மச்சான் என்ற வார்த்தை மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கருணாநிதிக்கு மரியாதை ஏன்?
''திமுக.,வை அழிப்பேன் என்றும், கருணாநிதியை பற்றி விமர்சித்தும் பேசிய அண்ணாமலை, அவரது நினைவிடம் சென்று கும்பிட்டு சென்றுள்ளார்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்திருந்தார். அது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை கூறிய பதில்: ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. சித்தாந்த ரீதியாக திமுக, பாஜ.,வுக்கு வித்தியாசங்கள் இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் செய்த பணிகளுக்காக விவசாயியின் மகனாக கருணாநிதி நினைவிடம் சென்று கும்பிடு போட்டதை பெருமையாகத்தான் பார்க்கிறேன்.
வாஜ்பாய் உடனும் அவர்கள் கூட்டணி அமைத்திருந்தனர். பா.ஜ., பற்றி தவறான பிரசாரம் தமிழகத்தில் பரப்பப்படுவதாக அப்போது கருணாநிதி கூறியிருந்தார். என் வயதைவிட அவருக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. எத்தனை இடங்களில் கருத்து வேறுபாடுகளை நான் வெளிப்படுத்தினாலும், அவரது 100வது ஆண்டில் அவருக்கு மரியாதை செய்வதை கொச்சைப்படுத்தி பேசுகிறார்கள்.
முதுகெலும்பு வளையாமல்
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவிடமும் சென்றுள்ளேன். அதேபோல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடமும் செல்வேன். தமிழகத்திற்காக பணியாற்றியவர்களை பார்க்கக்கூடாது என சொல்வது தவறு. நான் யார் காலிலும் விழவில்லை; கூனிகுருகி நிற்கவில்லை; மூன்றடி தள்ளி நிற்கவில்லை. கம்பீரமாக நிமிர்ந்து சென்று, முதுகெலும்பு வளையாமல் சென்று கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வந்துள்ளேன்; அதற்காக பெருமைப்படுகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

