இது பொற்கால ஆட்சி அல்ல; கொலைகார ஆட்சி: திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்
இது பொற்கால ஆட்சி அல்ல; கொலைகார ஆட்சி: திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்
ADDED : நவ 06, 2025 08:34 PM

சென்னை: இது பொற்கால ஆட்சியல்ல, கொலைகார ஆட்சி என்பதே உண்மை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாலம் கட்டத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து யோகநாதன் என்ற இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. திமுக அரசின் அலட்சியத்தால் பலியான இளைஞரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு உடனடியாகத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனத் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சில மாதங்களுக்கு முன் தாராபுரம் அருகே இதே போல பாலம் கட்டுவதற்காகத் தோண்டப்பட்டிருந்த 12 அடி குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த கணவன், மனைவி பலியானதோடு அவர்கள் மகளும் படுகாயமடைந்த நிலையில் மீண்டுமொரு சம்பவம் அதே போல நிகழ்ந்துள்ளது திமுக அரசின் தொடர் அலட்சியத்தையே காட்டுகிறது.
பாலம் கட்டத் தோண்டும் இடத்தில் எச்சரிக்கைப் பலகைகளோ தடுப்புகளோ வைக்காமல் அம்போவென விட்டுச் சென்று அப்பாவி உயிர்களைப் பறிப்பது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? அலட்சியத்தால் அப்பாவி உயிர்களை திமுக அரசு பலியிடுகிறது.
ஒன்று சாலை, பாலம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் மக்களை வதைக்கிறீர்கள் அல்லது உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் போர்வையில் கமிஷன் அடித்து வேலைகளை முறையாகச் செய்யாமல் மக்களை வதைக்கிறீர்கள். மொத்தத்தில் இது பொற்கால ஆட்சியல்ல, கொலைகார ஆட்சி என்பதே உண்மை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

