போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல: முதல்வருக்கு அண்ணாமலை பதில்
போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல: முதல்வருக்கு அண்ணாமலை பதில்
ADDED : மார் 11, 2025 06:52 PM

சென்னை:'' தி.மு.க.,வின் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தமிழகம் முழுதும் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தமிழக பா.ஜ., நடத்தி வருகிறது. இக்கையெழுத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மக்களிடம் ஆதரவு காணப்படுவதாக அக்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தி.மு.க.,வின் அறுபதாண்டு கால பொய்ப் பித்தலாட்டங்களைத் தமிழக மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு, சமக்கல்வி கையெழுத்து இயக்கத்திற்குப் பெருமளவில் ஆதரவளித்து வருகின்றனர். ஆனால், நாட்டு நடப்பே தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கண்களைத் திறந்து பாருங்கள் முதல்வரே. உங்கள் போலி நாடகத்தை நம்பி ஏமாற இது 1960கள் அல்ல. அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை இனியும் உங்களால் தடுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.