'இதுவே முதல்முறை': டாக்டர் மீதான தாக்குதல் குறித்து போலீஸ் கமிஷனர் விளக்கம்
'இதுவே முதல்முறை': டாக்டர் மீதான தாக்குதல் குறித்து போலீஸ் கமிஷனர் விளக்கம்
UPDATED : நவ 13, 2024 04:25 PM
ADDED : நவ 13, 2024 04:20 PM

சென்னை: '' டாக்டர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கவில்லை. இதுவே முதல்முறை,'' என சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறினார்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியது தொடர்பாக விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் கமிஷனர் அருண் ஆய்வு செய்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டாக்டர்கள் மீது தொடர்தாக்குதல் நடக்கவில்லை. முதல்முறையாக தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனைகளில் நிலவும் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. டாக்டர்களின் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்வோம். சென்னையில் உள்ள நான்கு மருத்துவமனைகளிலும் தனித்தனி போலீஸ் ஸ்டேசன்கள் உள்ளன.
டாக்டரை கத்தியால் குத்திய நபரின் தாயார் ஆறு மாதங்களாக இங்கு தான் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றவாளிதினமும் வந்து சென்றார். நேற்று கூட டாக்டரிடம் பேசி உள்ளார். நடந்தது கொலை முயற்சி. இவ்வாறு அருண் கூறினார்.