மோசடி செய்வதில் இது புதுவிதம்: சைபர் குற்றவாளிகள் கண்டுபிடிப்பு
மோசடி செய்வதில் இது புதுவிதம்: சைபர் குற்றவாளிகள் கண்டுபிடிப்பு
UPDATED : அக் 17, 2024 07:14 AM
ADDED : அக் 17, 2024 02:01 AM

சென்னை:'தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல்' என்ற, மத்திய அரசின்இணையதளத்தை போலியாக உருவாக்கி, ஆபாச படம் பார்த்ததாக மிரட்டல் விடுத்து, சைபர் குற்றவாளிகள் பணம் பறிக்க முயற்சி செய்வதாக, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பிரிவுகூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குற்றத்தடுப்புக்கு சாலைகளில் போலீசார் ரோந்து பணியில் செல்வது போல, இணையதளம் வாயிலாக நடக்கும் பண மோசடிகள் மற்றும் 'வாட்ஸாப், டெலிகிராம்' போன்ற செயலிகள் மற்றும் சமூக வலைதளம் வாயிலாக நடக்கும் குற்றங்களை கண்காணிக்க, இணையதள ரோந்து குழுக்களை உருவாக்கி உள்ளோம்.
இணையதள ரோந்து குழு
இக்குழுவினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, இணையதளத்தில் தீங்கு விளைவிக்கும் மற்றும்சட்ட விரோத செயலில் ஈடுபடும் இணையதளம் சார்ந்த தகவல்களை திரட்டி வருகிறது. அப்போது, சைபர் குற்றவாளிகள் மத்திய அரசின், தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல் என்ற இணையதளத்தை போலியாக உருவாக்கி, பண மோசடியில் ஈடுபட முயற்சி செய்து வருவதை, இணையதள ரோந்து குழுவினர் கண்டறிந்தனர்.
சைபர் குற்றவாளிகள், உங்கள் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களுக்கு, infaulwnmx.cyou என்ற 'லிங்க்' அனுப்புவர்.
அதை 'கிளிக்' செய்தவுடன், பொது மக்கள் சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, மத்திய அரசு உருவாக்கி உள்ள, தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டல் போன்ற போலி இணையதளத்தை திறக்கச் செய்வர்.
அதில், 'நீங்கள் ஆபாச படம் பார்த்ததால், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கணினியும் முடக்கப்பட்டுள்ளது. அபராதமாக, 30,290 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதை கிரெடிட் கார்டு வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். அதற்கு, தேசிய சைபர் கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் வசதி செய்து தரப்பட்டுள்ளது' என, மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கின்றனர்.
குறுஞ்செய்தி
இந்த மோசடி இணையதளம் சீனாவில் இருந்து செயல்படுத்துவதை அறிந்து, அந்நாட்டு இணைய பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மோசடி இணையதளம் அகற்றப்பட்டுள்ளது.
அதேபோல, பொது மக்களின் மொபைல் போன்களுக்கு, இந்திய அஞ்சல் துறையில் அனுப்பியது போல, சைபர் குற்றவாளிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.
அதில், 'உங்கள் பார்சலை எங்களால் டெலிவரி செய்ய முடியவில்லை. டெலிவரி செய்ய கீழ் உள்ள, லிங்க் கிளிக் செய்யவும்' எனக் கூறி, அதற்கான கட்டணம், 25 ரூபாய் வசூலிக்கின்றனர். இதன் வாயிலாக, கிரெடிட் கார்டு தகவல் திருட்டிலும் ஈடுபட முயற்சிக்கின்றனர்.
இத்தகைய புதுவித சைபர் குற்றங்கள் குறித்து, 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.