UPDATED : பிப் 10, 2024 06:39 AM
ADDED : பிப் 10, 2024 05:11 AM

கும்மிடிப்பூண்டி: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரையை நேற்று, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் மேற்கொண்டார்.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் ரெட்டம்பேடு சந்திப்பு முதல் பேருந்து நிலையம் வரை நடந்து சென்றார். நடைபயணத்தின் போது, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் திறந்தவெளி வாகனத்தில் அண்ணாமலை பேசியதாவது:
![]() |
கும்மிடிப்பூண்டி என்றாலே தொழிற்சாலைகளால் மாசு அடைந்த சுற்றுச்சூழல் என்ற நிலை உள்ளது.
தொழில் வளர்ச்சி இருக்க வேண்டும். அதே சமயத்தில் தனிமனித வாழ்வை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.
![]() |
திருவள்ளூர் எம்.பி., ஜெயகுமாரை பொறுத்தவரை, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில் வரும் டயலாக்கை போன்று 'இந்த சப்ஜெட்க்கு உயிர் வந்திருச்சா' என்பது போல் நான்கரை ஆண்டு காலம் அமைதியாக இருந்து விட்டு தற்போது, துடிப்புடன் இருப்பது போன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறார்.
மோடிதான் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறார் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
மாசற்ற கும்மிடிப்பூண்டியின் வளர்ச்சிக்காக மோடியின் கரத்தை வலுப்படுத்த, பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'இளைஞர் நலன் என்ற துறை இருந்தும் எந்த வகையிலும் இளைஞர்களை அரசு பாதுகாக்கவில்லை.
'மாறாக உதயநிதியை ஹைலைட் செய்வதற்காக மட்டுமே இயங்கி வரும் துறையாக உள்ளது. இந்த ஆட்சியினர் மதுக்கடைகளை நடத்தி இளைஞர் சமுதாயத்தை சீரழித்து வருகின்றனர்' என்றார்.
பொன்னேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் பஜார் பகுதியில், அண்ணாமலை பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.,தலைவர் அண்ணாமலைபேசியதாவது:
மக்களோடு மக்களாக நடந்து செல்லும்போது, மக்களின் பிரச்னைகளை தெரிந்து கொள்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு. ஒரு அரசியல்வாதி மக்களோடு மக்களாக வரும்போது மட்டுமே சாமானியனுக்கான அரசியல் இங்கு நடக்கும். ஆனால், இங்கு நமக்கு நடந்து செல்வதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
அனுமதியை மீறி பயணிக்கக்கூடாது என்பதால், நாம் இந்த பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.
இதுவரை, 193 தொகுதிகளில் நடந்துள்ளேன். நடைபயணம் இல்லாமல் நேரடியாக மேடை ஏறியது இந்த தொகுதியில் தான். நாம் முக்கியமான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். வரும் லோக்சபா தேர்தலில், யார் பிரதமராக வரவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
இந்தியாவின் அரசியல் களமானது, ஒருபுறம் நம் பிரதமர் மோடி; எதிரணியில், இண்டியா கூட்டணி என்ற பெயரில் ஒருகூட்டம்.
குடும்ப ஆட்சி, லஞ்ச ஊழல், ஜாதி அரசியல், அடாவடியை பிரதமர் மோடி எதிர்க்கிறார். இந்த நான்கும் இருக்கும் கூட்டம் அவரை எதிர்த்து நிற்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு இல்லாத, குடும்ப வளர்ச்சிக்கு மட்டுமே இருந்த குடும்ப ஆட்சியை நாம் ஒழித்துக்கட்ட முடியும் என்ற நம்பிக்கையை மோடி ஏற்படுத்தி உள்ளார்.
இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் அனைவருமே குடும்ப அரசியலில் இருந்து வந்தவர்கள். இது, அவர்களுக்கு கடைசி தேர்தல் என்பதால், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீச தயாராகிவிட்டனர். காங்., தமிழகத்தில் தனியாக நின்றால், 12 இடங்களில் ஜெயித்து விடுவோம் எனதமிழக தலைவர் அழகிரிதெரிவித்து உள்ளார்.
காங்., கட்சி இந்தியாவிலேயே, 12 இடங்களில் ஜெயிக்க வாய்ப்பில்லை. காங்கிரசில் தொண்டர்களை விட தலைவர்களே அதிகம். தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க.,வின் பஜனை கோஷ்டியாகவே இருக்கிறது.
வரும் லோக்சபா தேர்தலில், 400 எம்.பி.,க்களுடன், மோடியை பிரதமராக அமர வைக்க வேண்டியது நம் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.