திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்; பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம்
ADDED : ஜூலை 30, 2025 05:33 PM

சென்னை: திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கல்லாத் தூரிலிருந்து சொந்த ஊருக்கு பைக்கில் சென்ற இவர் நிழலுக்காக முன்னூரான் காடுவெட்டி பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள மரத்தடி நிழலில் நின்றுள்ளார்.
அப்போது அங்கே இருந்த ஆறு இளைஞர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சிவகுமாரிடம் வம்பு இழுத்துள்ளனர். இதை தனது செல்போனில் சிவக்குமார் வீடியோ எடுத்துள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சிவக்குமாரை தாக்க துவங்கி உள்ளனர். இரும்பு ராடு மற்றும் கட்டைகளுடன் சாலையிலேயே ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவக்குமார் அங்கே வந்து கொண்டிருந்த அரசு பஸ்சில் ஏறி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்றுள்ளார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அண்ணாமலை கூறி இருப்பதாவது: அரசுப் பஸ்சில் பட்டப்பகலில் வாள்கள் சுழன்றன. திமுக அரசின் கீழ் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை இதுதான்.
இன்று, பொது மக்களுக்கு பாதுகாப்பு என்பது ஒரு உத்தரவாதம் அல்ல. மாறாக ஒரு தொலைதூரக் கனவு. திமுக 4 ஆண்டுகளில் தமிழகத்தை மூன்று தசாப்தங்கள் பின்னோக்கி வெற்றிகரமாக இழுத்துச் சென்றுள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.