இதெல்லாம் ரொம்ப அதிகம்: தி.மு.க., குற்றச்சாட்டுக்கு மார்க்சிஸ்ட் பதில்
இதெல்லாம் ரொம்ப அதிகம்: தி.மு.க., குற்றச்சாட்டுக்கு மார்க்சிஸ்ட் பதில்
ADDED : ஜன 05, 2025 06:39 PM

விழுப்புரம்: '' தி.மு.க.,வால் தான் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பது ரொம்ப அதீதமான வார்த்தை'', என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலர் சண்முகம் கூறியுள்ளார்.
அரசின் செயல்பாடுகளை விமர்சித்த மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணனை கண்டித்து, தி.மு.க., தனது கட்சிப் பத்திரிகையில் எழுதிய தலையங்கத்தில் ''பொத்தாம் பொதுவாக வாய்க்கு வந்ததை பாலகிருஷ்ணன் சொல்வதற்குக் கிடைக்கும் முக்கியத்துவம் என்பது அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான அழுத்தம் அல்ல. கூட்டணியில் இருப்பதால் கிடைக்கும்' வெளிச்சங்கள் மட்டுமே'', எனக்குறிப்பிட்டு இருந்தது.
விழுப்புரத்தில் மாநில செயலாளர் ஆக தேர்வான பிறகு நிருபர்களை சந்தித்த சண்முகத்திடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து சண்முகம் கூறியதாவது: ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியலமைப்பு, இந்திய மக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமை. இதனை மறுப்பதற்கு அரசுக்கு உரிமை கிடையாது. கட்சியின் செந்தொண்டர் பேரணிக்கு விழுப்புரம் போலீசார் அனுமதி மறுத்ததால் கண்டனம் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கட்சியின் மாநில மாநாட்டுபேரணிக்கு அனுமதி மறுப்பு என்பதை ஏற்க முடியாது. போலீசாரின் அணுகுமுறைக்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். இதனை தி.மு.க., புரிந்து கொள்ளும்.
தி.மு.க.,வோடு பல நேரத்தில் உறவாக இருந்து இருக்கிறோம். பல நேரத்தில் எதிர் வரிசையில் வேறு அணியில் இருந்து இருக்கிறோம். இவர்களால் எங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது என்பது ரொம்ப அதீதமான வார்த்தை. நிச்சயமாக மார்க்சிஸ்ட் கட்சி, பலத்திற்கு ஏற்ப மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் சமரசம் அற்ற வகையில் போராட்டம் நடத்துவதால் தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறதே தவிர, ஏதோ தி.மு.க., வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கட்சி செயல்படுகிறது என்கிற தி.மு.க., தலைமை சொல்வது பொருத்தமல்ல. முரசொலி பத்திரிகையில் வெளியிட்ட செய்தி பொருத்தமானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
சண்முகம் மேலும் கூறியதாவது: பா.ஜ., அரசு மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பது, மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, அரசியலமைப்புக்கு மாறாக நடந்து கொள்வது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பா.ஜ.,வின் கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி வலிமைமிக்க போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.
மதவெறி சக்திகளை எதிர்ப்பதில் தி.மு.க., உடன் தொடர்ந்து மார்க்சிஸ்ட் பயணிக்கும். தமிழகத்தில் நவீன தாராளமய கொள்கை அமல்படுத்துவது என்ற பெயரில் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக பூர்வமான முறையில் எங்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

