இது உங்கள் இடம்: சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை!
இது உங்கள் இடம்: சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை!
ADDED : மார் 15, 2024 01:19 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
எச்.ஆப்ரகாம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவதில், பழம் தின்று கொட்டையை வெளியே துப்பிவிட்டு, தில்லாக நடமாடி கொண்டிருப்பவர்கள் மீது, 'அந்த பைல் ரெடி, இந்த பைல் ரெடி, இதோ காட்றேன் பார்' என்றெல்லாம் சொன்னார் ஒருவர்.
ஆனானப்பட்ட, '2ஜி' வழக்கு விசாரணையின் போதே, டில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு, தண்ணீர் காட்டி, போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலையாகி வெளியே வந்திருப்பவர்கள் அவர்கள்.
சற்று திரும்பிப் பார்ப்போமா?
கருணாநிதி ஆட்சியின் போது, எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் மீது பல்வேறு வகையான ஊழல் புகார்களை சுமத்தி, அவற்றை கவர்னரிடம் சமர்ப்பித்தார்.
கவர்னர் அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய கோப்பை, அப்படியே கருணாநிதிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த நாட்டு சட்ட-திட்டங்களில் உள்ள மாபெரும் கோளாறே இதுதான். யார்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியே குற்றம் சாட்டப்பட்டவருக்கே அனுப்பி விளக்கம் கேட்கும் பழக்கம்... தமாஷாக இருக்கிறது!
அது குறித்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, கருணாநிதி பின் வருமாறு பதில் அளித்தார், 'பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்!' என்று!
அன்று எம்.ஜி.ஆர்., கருணாநிதி மீது சுமத்திய ஊழல் புகார் குற்றச்சாட்டுகளால், கருணாநிதியை, ஆட்டவோ, அசைக்கவோ முடியவில்லை. தண்டனையும் வாங்கித் தர முடியவில்லை.
ஏனெனில், நம் நாட்டு சட்டங்கள் அப்படி!
அவை சாமானியர்களுக்கு சவுக்காகவும், அரசியல்வாதிகளுக்கு மாலையாகவும் தான் பெரும்பாலும் உள்ளன.
அதுபோல, ஏறக்குறைய ஆறு மாதங்களாக அண்ணாமலை, தி.மு.க., பைல்ஸ், பாகம் 1, பாகம் 2 என வெளியிட்டபடி இருந்தார். ஏதாவது நடந்ததா? ஒன்றும் நடக்கவில்லை!
குற்றம் சாட்டப்பட்டவரோ, 'இந்தியா என்று ஒரு நாடே கிடையாது. ராமன் எங்களுக்கு விரோதி தான்' என்று கதைத்து கொண்டிருக்கிறார்.
இவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க இந்த சட்ட திட்டங்களால் கூட முடியவில்லை; அண்ணாமலை எம்மாத்திரம்?
சும்மா பூச்சி காட்டாதீங்க அண்ணாமலை... போரடிக்கிறது!

