இது உங்கள் இடம்: ஊழலில்லாமல் திட்டம் நடந்தால் நல்லது!
இது உங்கள் இடம்: ஊழலில்லாமல் திட்டம் நடந்தால் நல்லது!
ADDED : பிப் 27, 2024 12:40 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்:
அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல், அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்தவர் காமராஜர். அவருடைய ஆட்சிக்காலத்தில் கல்வி, மருத்துவம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் மட்டும் தான், இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
ஆனால், கடந்த 56 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், வறுமையை ஒழிக்கிறேன் என்ற பெயரில், தொலைநோக்கு சிந்தனையின்றி, தேர்தல் அதிக ஓட்டுகளை வாங்க வேண்டும் என்ற ஒற்றை லட்சியத்துடன், ஏகப்பட்ட இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தனர்.
செருப்பு, பல்பொடி, வேட்டி சேலை, சைக்கிள், கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, லேப்டாப், தாலிக்கு தங்கம் என்று, ஏதேதோ இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தினர்.
தற்போதைய அரசும், கல்லுாரி மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய், குடும்பத் தலைவியருக்கு, மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்றெல்லாம், திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பசியால் வாடும் ஒருவனுக்கு, அவன் பசியாற, மீனை இலவசமாக கொடுப்பதை விட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால், அவனுக்கு தேவையான மீனை அவனே பிடித்துக் கொள்வான். கையேந்த வேண்டாமே!
தற்போதைய அரசு, 'தாயுமானவர்' என்ற இலவச திட்டம் அறிவித்துள்ளதை வரவேற்கலாம். ஏழைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்துத் தந்து, அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதே திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்திற்கு, மிகவும் அடிமட்டத்தில் உள்ள ஏழைகள், ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றை பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என்று தகுதி நிர்ணயம் செய்தால் நல்லது.
மேலும், இத்திட்டத்தில், லஞ்சம், ஊழல் எதுவும் தலையிடாமல் செயல்படுத்தினால், இது நல்ல திட்டம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.
