ADDED : ஜன 30, 2024 01:22 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
என். வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பா.ஜ.,விற்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே, அக்கட்சியை வீழ்த்த முடியும் என்று உணர்ந்து, 28 எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற, 'இண்டியா' கூட்டணி உருவானது. ஆனால், அக்கூட்டணி லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பற்றி பேச துவங்கிய நிலையிலேயே ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.
மேற்கு வங்கத்தில் மொத்தம், 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2019 லோக்சபா தேர்தலில், இதில், இரண்டு இடங்களில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது. இந்த இரண்டு தொகுதிகளை மட்டும், 'இண்டியா' கூட்டணி சார்பில், காங்கிரசுக்கு ஒதுக்க முடியும் என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா கறாராக கூறியதை, காங்., ஏற்க மறுத்து விட்டது.
இதனால், கடுப்பான மம்தா, '42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்' என அதிரடியாக அறிவித்து விட்டார். இதேபோல, பஞ்சாப் மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான, பகவந்த் சிங் மானும், அங்குள்ள 13 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார். இதனால், அங்கும் காங்., கட்சி தனித்து விடப்பட்டுள்ளது.
கேரளாவில், காங்கிரஸ் கட்சியை எதிர்த்தே, இடதுசாரிகள் அரசியல் நடத்துவதால், அம்மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்தனியே நிற்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யத் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தமிழகத்தில் மட்டும் தான், முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையுடன் காங்கிரசுக்கு சில தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி, திறப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தியதன் வாயிலாக, பா.ஜ.,வின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்திருப்பதால், மூன்றாவது முறையாக மோடி பிரதமராவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 'இண்டியா' கூட்டணியால், இதை தடுக்கவே முடியாது என்பது தான் நிதர்சனம்.