இது உங்கள் இடம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் நன்மதிப்பு!
இது உங்கள் இடம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் நன்மதிப்பு!
ADDED : ஜன 24, 2024 04:01 AM

வி.பத்ரி, கிளாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்:
தமிழக கவர்னர் ரவிக்கு, ஒரு நல்ல கவர்னர் எப்படி இருக்க வேண்டும் என்று சுத்தமாக தெரியவில்லை.
* புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து விட்டு, பேசாமல் இருக்க வேண்டும்
* தமிழக அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை, அப்படியே சட்டசபையில், 'கவர்னர் உரை' என்ற பெயரில் வாசிக்க வேண்டும்
* தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட வேண்டும்
* தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களில், கேள்வி கேட்காமல் கையெழுத்திட்டு உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்
* எந்த மசோதாவையும் நிலுவையில் வைக்காமல், உடனே ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும்
* முக்கியமாக, கவர்னர் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், கவர்னர் மாளிகைக்குள் மட்டும் உலா வந்து, அங்கு துள்ளி ஓடும் மான்களை ரசித்து கொண்டிருக்க வேண்டும்
* சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்து, முதல்வரை புகழ்ந்து தள்ள வேண்டும்
* அரசின் செயல்பாடுகளை ஒரு போதும் விமர்சிக்க கூடாது
* மத்திய அரசு வழங்கும் நிதிக்கு கணக்கு கேட்டு, முதல்வரையும் அமைச்சர்களையும் ஆத்திரமூட்ட கூடாது
* ஆக மொத்தம், மாநில அரசின் தலையாட்டி பொம்மையாக இருந்து, ஆமாம் சாமி போட வேண்டும்.
இப்படி செய்தால், அவரை இந்திரன், சந்திரன் என்று திராவிட மாடல் ஆட்சியாளர்கள் புகழ்ந்து தள்ளுவர். அவ்வளவு ஏன்...? அவர்கள் அடிக்கும் கமிஷன் தொகையில், கணிசமான பங்கை கவர்னர் மாளிகைக்கும் அனுப்பி வைப்பர்.
இதற்கு முன்பிருந்த கவர்னர்கள் பலரும் இப்படித்தான் இருந்துள்ளனர். ஆனால், கவர்னர் ரவி, தன் பதவிக்குரிய அதிகாரங்களை சரியாக பயன்படுத்துவதும், நேர்மையான நிர்வாகத்தை விரும்புவதும் தான், இவர்களுக்கு எட்டிக்காயாக கசக்கிறது.
அதே நேரம், தமிழக மக்கள் மத்தியில், கவர்னர் மீதான நன்மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!

