இது உங்கள் இடம்: ஹிந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்பாரா?
இது உங்கள் இடம்: ஹிந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்பாரா?
ADDED : பிப் 04, 2024 12:49 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திருச்சி மாவட்டம், சிறுகனுாரில் சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின், 'வெல்லும் ஜனநாயகம்' மாநாட்டில், 'பெரும்பான்மைவாத அரசியலை புறக்கணிப்பது' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்களும் நம் உடன்பிறப்புகள் தான். அவர்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாழ்பவர்களை விட, நம் நாட்டில் சகல உரிமைகளுடனும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை எவரும் மறுக்க மாட்டர். அவர்களை அரவணைப்பதில் தவறில்லை.
நம் நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் மதச்சார்பின்மை பேசுகின்றன. ஆனால், சிறுபான்மையினருக்கு மட்டுமே பகிரங்கமாக ஆதரவு கொடுக்கின்றன. இந்தியா வின் சொந்த மதமான ஹிந்து மதத்தை எந்த கட்சியும் ஆதரிப்பதே கிடையாது.
அது மட்டுமா...? ஹிந்துக்களை திருடர்கள் என்றும், சனாதனத்தை ஒழிப்போம் என்றெல்லாம் வேறு சீண்டி பார்க்கின்றனர். இதை எல்லாம் கண்டிக்க, பா.ஜ., கட்சியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் முன்வருவதில்லை.
இதுவரை ஹிந்துக்கள் ஒற்றுமையில்லாமல் இருந்ததால், ஜாதிக் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகளும் பலன் பெற்று வந்தன. ஆனால், இப்போது அரசியல் கட்சிகளின் போலி மதச்சார்பின்மையை ஹிந்துக்கள் நன்றாக உணர்ந்து விட்டதால், இப்போது ஒன்றுபட்டு வருகின்றனர்.
வி.சி.,க்கள் மாநாட்டில், 'பெரும்பான்மைவாத அரசியலை புறக்கணிக்க வேண்டும்' என்று, பலருக்கும் தெளிவாக புரியாத விதத்தில் கூறப்பட்டுள்ள தீர்மானத்தை, 'பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் ஓட்டுகள் எங்களுக்கும், எங்கள் கூட்டணி கட்சிகளுக்கும் தேவையில்லை' என்று தெளிவாக அறிவிக்க திருமாவளவன் முன்வருவாரா?