ADDED : மார் 01, 2024 01:22 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நம் நாட்டில் ஏழைகளுக்கு ஒரு நீதி, செல்வந்தருக்கு ஒரு நீதி என்று கூறப்படுவது உண்டு. கடைக்கோடி அரசு ஊழியர்களில் ஒருவர் லஞ்சம் வாங்கினாலே கைதாவதும், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவதும் நாம் அறிந்ததே.
ஆனால், அரசியல் தலைவர்கள் எத்தனை கோடிகள் ஊழல் செய்தாலும், அதற்காக வெட்கப்படுவதோ, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் அஞ்சுவதோ இல்லை.
சமீபத்திய உதாரணம் செந்தில் பாலாஜி. இதற்கு, அவர்கள் சட்ட வல்லுனர்களை வைத்து, வழக்கில் இருந்து தப்பித்துக் கொள்வதே காரணம்.
இருப்பினும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவர்களின் சகாக்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹா போன்றோர், தற்போதும் இருப்பதால் தான், ஓரளவுக்காவது நீதித்துறை உயிர்ப்புடன் இருக்கிறது.
ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது, அவர்களை தன் சவுக்கடி தீர்ப்புகளால் திருத்தி கடிவாளம் போடுகிறது. தமிழகத்தில், கடந்த பல ஆண்டுகளாக, ஊழல் வழக்குகளில் சிக்கிய பல பிரபலங்கள் தங்களுக்கு சாதகமான சூழல் வரும் போது, வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.
இதற்கு எல்லாம் சாவு மணி அடித்தவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர், தற்போது அமைச்சர் பெரியசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு, இதுபோல ஊழல் வழக்குகள் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் துாக்கத்தை கெடுத்திருக்கும்.
அமைச்சர் பெரியசாமியின் வழக்கிலும், சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி கீழமை நீதிமன்றத்தில் வழக்கை முழுமையாக நடத்தாததால், சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
நல்லவேளை, தற்போது அந்த வழக்கை வரும் ஜூலை 31க்குள் விசாரணை நடத்தி முடிக்க நீதிபதி உத்தரவிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல்வாதிகளின் ஊழல் குறைய, நமக்கு இவரை போல பல நுாறு நீதிபதிகள் தேவை!

