இது உங்கள் இடம்: சேற்றில் செந்தாமரை மலர்ந்தே தீரும்!
இது உங்கள் இடம்: சேற்றில் செந்தாமரை மலர்ந்தே தீரும்!
ADDED : பிப் 24, 2024 12:21 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேறும், சகதியும் மண்டிக் கிடக்கும் தமிழகத்தில் தாமரை எப்படியாவது மலர்ந்து விட வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது; தலைகீழாக நின்னு தண்ணி குடிக்கிறது. ஆனால், அந்த சேற்றில் இத்தனை காலம் வேரூன்றி சுகம் கண்ட கருவேல மரங்களும், முட்செடிகளும், தாமரை மலர்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளன.
ஆம்... லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் நடத்தும் திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிக்க பா.ஜ., பல முயற்சிகளை செய்து வருகிறது. ஆயினும், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் கொள்கையில்லா பல கட்சிகள், தமிழகத்தில் தாமரை மலரக் கூடாது என்பதில் கவனமாக உள்ளன.
ஆயினும், 'போதும்டா சாமி... இலவசங்களை காட்டி, எங்களை அடிமையாக்கி ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு விடை கொடுத்து, ஊழல் இல்லாத ஒரு நல்ல கட்சியை அரியாசனத்தில் அமர்த்துவோம்' என்று தமிழக மக்களில் பலரும் நினைக்க துவங்கி விட்டனர்.
ஊழல் மலிந்த திராவிடக் கட்சிகளுக்கு நல்ல மாற்றாக பா.ஜ.,வை பார்க்கின்றனர். பிரதமர் மோடியின் திறமையான, நேர்மையான நிர்வாகம், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தெளிவான சிந்தனை ஆகியவை, பா.ஜ., மீது தமிழக மக்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.
திராவிடக் கட்சிகளின் போலி வாக்குறுதி களையும், இட்டை வேடங்களையும் இனியும் நம்ப அவர்கள் தயாரில்லை.
தங்கள் எல்லா தவறுகளையும், ஓட்டுக்கு பணம் என்ற மந்திரம் வாயிலாக சரிசெய்து விடலாம் என கனவு காணும் தி.மு.க.,
தங்களுக்கு என்று எந்த சிறப்பு அடையாளமும் இன்றி எம்.ஜி.ஆர்., - ஜெ.,யின் புகழ், இரட்டை இலை சின்னத்தை வைத்து சாதித்து விடலாம் என எண்ணும் அ.தி.மு.க.,
மாபெரும் தேசிய கட்சியாய் இருந்து கோஷ்டி சண்டைகளால் தேய்ந்து போன காங்கிரஸ்
சில சீட்களுக்காக பொதுவுடைமை கொள்கையை அடகு வைத்துள்ள கம்யூனிஸ்ட்கள்
ஒன்றிரண்டு சீட்களுக்காக, தி.மு.க., வாசலில் காத்து கிடக்கும் ம.தி.மு.க., - வி.சி.,க்கள் போன்ற குட்டி கட்சிகள்.
இப்படி எல்லாவற்றையும் பார்த்து, தமிழக மக்களுக்கு அலுத்து போய் விட்டது. எனவே, வரும் லோக்சபா தேர்தலில் தமிழக வாக்காளர்கள், திராவிடக் கட்சிகள் எனும் சேற்றில், செந்தாமரையை மலர வைப்பர் என்பதில் சந்தேகமில்லை!

