இது உங்கள் இடம்: எப்படி கையாளுகின்றனர் என்று பார்ப்போம்!
இது உங்கள் இடம்: எப்படி கையாளுகின்றனர் என்று பார்ப்போம்!
ADDED : மார் 24, 2024 02:08 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவித்தாயிற்று. வேட்பாளர்கள் பட்டியலும் வெளிவந்தாயிற்று.
தேர்தல் நடைபெறும் கால கட்டங்களில், பொதுவாக எதிர்க்கட்சிகள், ஆளுங்கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு சுமத்தி, ஆட்சிக்கு வரத் துடிப்பது வழக்கம்.
கடந்த பத்தாண்டு கால பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மீது, எந்த ஊழல் புகாரையும் சுமத்தி, வாக்கு சேகரிக்க முடியவில்லை.
தற்போது தான், தேர்தல் பத்திரங்கள் விஷயம் கிடைத்திருக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட நன்கொடையை, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வாங்கி, கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
லட்சக்கணக்கான கோடிகளில் புரளும் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் கட்சி கூட, லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திடம், 509 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறது.
நீதியும், நியாயமும் மட்டுமே பேசும் கம்யூனிஸ்ட்களும் இந்த நன்கொடை விஷயத்தில் விதிவிலக்கில்லை.
பெரும்பாலான மாநிலங்களை ஆட்சி செய்யும் பா.ஜ., கூடுதலாக வாங்கி இருக்கிறது.
எனவே, தேர்தல் பத்திரங்கள் நன்கொடை விஷயத்தை முன் வைத்து, பிரதமரையோ, மத்திய அரசையோ, பா.ஜ.,வையோ விரல் சுட்டி குற்றம் சாட்ட, வேறு எந்த கட்சியாலும் முடியாது என்பது புரிந்து விட்டது. எப்படி கையாளுகின்றனர் என்று பார்ப்போம்!

