ADDED : பிப் 08, 2024 01:25 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ரமணா படத்தில், பிணத்தை வைத்து காசு பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவமனை போல, 50 ஆண்டுகளுக்கு முன்பே மரணித்த ஜனநாயகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர், நம் அரசியல்வாதிகள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால், இங்கு யாருமே ஜனநாயக வழியில் ஆட்சி செய்யவில்லை என்பதே நிதர்சனம். ஆனால் சற்றும் கூச்சமில்லாமல், ஜனநாயகத்தைக் காக்க வந்த ரட்சகர்கள் போல நடிக்கின்றனர்.
நேருவுக்குப் பின் இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் என, காங்கிரஸ் கட்சி பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்த இந்த ஜனநாயகப் படுகொலை, இன்றும் பல மாநிலங்களில் வாழையடி வாழையாக தொடர்கிறது.
விளக்கெண்ணெயில் வதக்கிய வெண்டைக்காய் போல கொள்கை கொண்ட, 28 கட்சிகள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற புறப்பட்டு, இன்று தங்களையே காப்பாற்ற முடியாமல் தடுமாறி தவிக்கின்றன.
பீஹாரில் ஆண்டுதோறும் கூட்டணியை மாற்றும் நிதீஷ் குமார், முதல்வர் பதவியில் மட்டும் பசை போல ஒட்டிக் கொண்டிருக்கிறார். நேற்று வரை, தன் பக்கத்தில் இருந்தவர்களை இன்று எதிரிகளாக்கி வசைபாடுகிறார்.
'மக்களாட்சிக்கு புது அர்த்தம் கொடுத்த நாம், உண்மையான மக்களாட்சி பற்றி வாய் கிழிய இப்படி பேசுகிறோமே... இதைக் கேட்டு மக்கள் என்ன நினைப்பர்' என்றெல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. மக்களும் இதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.
ஆக, இன்று பாரதத்தில் ஜனநாயகம் என்ற வார்த்தை சிரிப்பாய் சிரிக்கிறது. மக்களுக்காக, மக்களைக் கொண்டு, மக்களால் நடத்தப்படும் ஆட்சி என்பதை, 'சொந்த மக்களுக்காக' என்று மாற்றி கேலிக்கூத்தாக்கி விட்டனர்.
உண்மையில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்விருந்தால், வலிமையான ஓட்டு எனும் ஆயுதம் மக்கள் கையில் தான் உள்ளது. சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லையேல், 'ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறோம்' என்ற பெயரில் கூத்தடிக்கும் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தவே முடியாது!

