இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., -- ஜெ.,க்கு நிகர் யாருமில்லை!
இது உங்கள் இடம்: எம்.ஜி.ஆர்., -- ஜெ.,க்கு நிகர் யாருமில்லை!
ADDED : மார் 02, 2024 12:53 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த மிகப் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எம்.ஜி.ஆர்., பற்றியும், ஜெயலலிதா பற்றியும் வெகுவாக புகழ்ந்து பேசினார்.
இதைப் பொறுக்காத அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 'எம்.ஜி.ஆர்., - ஜெ., பற்றிய பேசிய பிரதமர் மோடி, பழனிசாமி பற்றி ஏன் பேசவில்லை' என்று குமுறி இருக்கிறார்.
எம்.ஜி.ஆரும்., ஜெ.,யும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தியவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். தீய சக்தி என்று எம்.ஜி.ஆர்., அடையாளம் காட்டிய தி.மு.க.,வை, 11 ஆண்டுகள் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.
அதேபோல, ஜெ.,யும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல், தி.மு.க.,வை தடுத்து வைத்திருந்தார். அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், 2021ல் கூட தி.மு.க., ஆட்சிக்கு வந்திருப்பது சந்தேகம் தான்.
ஆனால், பழனிசாமி அப்படியா? தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்த பெருமைக்குரியவர். வெற்றிச் சின்னமாக விளங்கிய இரட்டை இலை சின்னத்தை தோல்வி சின்னமாக்கிய மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் பழனிசாமி.
இவர், அ.தி.மு.க., தலைமை பொறுப்புக்கு வந்ததும் நடந்த உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை என அனைத்து தேர்தல்களிலும் கட்சிக்கு தோல்வி தான் பரிசாக கிட்டியது. பா.ஜ., கூட்டணியை முறித்து கொண்டதன் வாயிலாக, வரும் லோக்சபா தேர்தலிலும் அ.தி.மு.க., மண்ணை கவ்வுவது உறுதி.
எல்லாவற்றுக்கும் மேலாக, எம்.ஜி. ஆர்., - ஜெ., போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுடன், பழனிசாமியை அந்த கட்சியின் தொண்டர்களே ஒப்பிட மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு நிகராக பழனிசாமி பெயரை சொல்லாமல், பிரதமர் மோடி தவிர்த்ததில் வியப்பேதும் இல்லை.

