ADDED : ஜன 19, 2024 03:37 AM

பொன்மணி ஜெயராஜ், செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கோவில் பகுதியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில், அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படி வாக்கு கொடுத்ததுடன் நின்றுவிடாமல், பக்தர்களுக்கு உதவும் வகையில், பழனி மலை அடிவாரம் மற்றும் கிரிவல பாதைகளில், ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக, 1,000த்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அரசின் செயலை வரவேற்கலாம்.
'பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகளை, இனி வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டும். சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும்' என்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால், 'அரசியல்வியாதிகள்' துணையுடன் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அரங்கேறலாம்.
அதே போல், சமீபத்தில் திருவண்ணாமலை வந்து சென்ற கவர்னர் ரவி, கிரிவலப் பாதையில் போதிய கழிப்பறைகள் இல்லாததை கண்டும், அசைவ உணவுகள் விற்கும் உணவகங்கள் இருப்பதை கண்டும் வருந்தியதாக கூறினார். 'அருணாசலேஸ்வரரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்' என்றும் கூறினார்.
உடனே அமைச்சர் வேலு, 'கிரிவல பாதையில் அசைவ உணவகங்களை அகற்றும் விவகாரத்தில் அரசு எதுவும் செய்ய முடியாது' என்று கைவிரித்து விட்டார்.
கவர்னர் மீதான கோபத்தில் அமைச்சர் வேலு இப்படி கூறினாரா என்பது தெரியவில்லை. கவர்னர் கூறினார் என்பதற்காக செய்யா விட்டாலும், பலநாள் விரதம் இருந்து, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு, அசைவ உணவின் மணம், அவர்களின் இறை வழிபாட்டிற்கு இடையூறாகவே இருக்கும். எனவே, கிரிவல பாதையில் உள்ள அசைவ உணவகங்களைஅகற்றி, பக்தர்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும்.

