இது உங்கள் இடம்: 'பாட்டாளி ரத்னா' விருது வழங்கலாம்!
இது உங்கள் இடம்: 'பாட்டாளி ரத்னா' விருது வழங்கலாம்!
ADDED : பிப் 11, 2024 03:02 AM

சுருதி ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக, இட ஒதுக்கீட்டிற்காக, 44 ஆண்டுகளாக போராடி வரும் மூத்த தலைவர் ராமதாசுக்கு பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்படாதது வருத்தம் அளிக்கிறது' என்று பா.ம.க., பொதுக்குழுவில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ஆதங்கப்பட்டுள்ளார்.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, மகாத்மா காந்தி அழைப்பு விடுத்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைக்கு சென்றவரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவருமான பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்கு, பாரத ரத்னா விருதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அது தெரிந்தவுடன், தன் தந்தை ராமதாசுக்கும் பாரத ரத்னா விருது கிடைக்கவில்லையே என்று அன்புமணி வருந்த ஆரம்பித்து விட்டார்.
ஜாதிய பாகுபாடுகள் மறைய உழைத்திருந்தால், ராமதாசை கண்டிப்பாக பாராட்டியிருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட ஒரு ஜாதிக்காக சங்கம் துவங்கி, அதை அரசியல் கட்சியாகவும் மாற்றி, இன்றளவும் அந்த சமுதாயத்துக்காக மட்டுமே அக்கட்சி பாடுபடுகிறது.
ஜாதியின் பெயரை சொல்லி இவர் அடைந்த வளர்ச்சியை கண்ட பின் தான், தமிழகத்தில் பல ஜாதிக் கட்சிகள் தோன்றி வளர்ந்தன. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி தாவுவதில், நிதீஷ் குமாருக்கு குரு, ராமதாஸ் என்று கூட சொல்ல முடியும்.இவையெல்லாம் தான் பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சாதனைகள். இந்த சாதனைகளுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்தால், அந்த விருதுக்கான கவுரவம் என்ன ஆவது?
அன்புமணி வேண்டுகோள் விடுத்தவுடன், மத்திய அரசிடம் உள்ள எல்லா விருதுகளையும், தனக்கு கொடுக்க காத்து கிடப்பதாக நினைத்து, 'பாரத ரத்னா விருது கொடுத்தாலும், அதை விட பெரிய விருது கொடுத்தாலும், அதை நான் வாங்க மாட்டேன்' என்று பிகு செய்து ராமதாஸ் பேசியது, அதை விடக் கொடுமை.பாரத ரத்னாவுக்கு வாய்ப்பில்லை.
வேண்டுமானால், ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் நிழல் பட்ஜெட் வெளியிட்டு மகிழ்வது போல், அன்புமணியே, தன் தந்தைக்கு, 'பாட்டாளி ரத்னா' என்று விருது கொடுத்து மகிழ்ந்து கொள்ளலாம்.

