இது உங்கள் இடம்: உடனடியாக தடுத்து நிறுத்துங்களேன்!
இது உங்கள் இடம்: உடனடியாக தடுத்து நிறுத்துங்களேன்!
ADDED : மார் 08, 2024 03:52 AM

ஆர்.கண்ணன், சிவகாசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில் கடிதம்:
தமிழகத்தை கெடுத்ததில், சினிமா துறைக்கு பெரிய பங்கு உண்டு. அந்த முகமூடியில் தான், ஹிந்து பண்பாட்டை அழிக்கும் முயற்சி கொஞ்ச கொஞ்சமாக மேற்கொள்ளப்பட்டு, இன்று போதையின் கூடாரமாக தமிழகம் விளங்கக் காரணமாகி விட்டது.
காமராஜர் காலம் வரை, தமிழ் சினிமாவில் மது அருந்தும் காட்சிகள் இடம் பெற்றதில்லை. பீம்சிங் படங்கள் அனைத்தும் குடும்பக் கதைகளாகவே இருந்தன; கோபாலகிருஷ்ணன் படங்கள், குடும்பம் மற்றும் சமூக கதைகளாக இருந்தன.
சின்னப்ப தேவர் போன்றோரெல்லாம், மது குடிக்கும் காட்சியை சினிமா பக்கமே கொண்டு வந்ததில்லை.
சினிமாவில் மது காட்சிகள் இடம் பெற ஆரம்பித்தது, தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட பின்பே.
தமிழ் சினிமா, ஒரு வகையில் அந்த வியாபாரத்துக்கு விளம்பரம் கொடுத்தது. இது எப்படி நடந்தது, யார் பின்னணி என்பது தெரியாவிட்டாலும், சினிமா, மக்களிடையே குடிப் பழக்கத்தை, 'ஊற்றி' வளர்த்தது என்று சொல்லலாம்.
அப்போதும் கூட, எம்.ஜி.ஆர்., ஒருவர் மட்டுமே, மதுவை தொடாத ஒரே நடிகராகத் திகழ்ந்தார். புகைபிடிக்கும் காட்சியில் கடைசி வரை, அவர் நடித்ததுமில்லை; ஊக்கப்படுத்தியதும் இல்லை. மற்ற நடிகர்கள் அனைவரும் இக்காட்சிகளில், சர்வ வல்லமையைக் காட்டினர்.
இன்று தமிழகமெங்கும், சர்பத் கடைகளை போல சாராயக் கடைகள், பரந்து விரிந்து வியாபித்து நிற்கின்றன. இப்போது படு ஆபத்தான கலாசாரமாக, போதைப் பழக்கம் பெருகி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இதை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், தமிழகம் சீர்கெட்டு விடும்.

