இது உங்கள் இடம்: கேரள நீதிமன்றங்களின் சபாஷ் தீர்ப்புகள்!
இது உங்கள் இடம்: கேரள நீதிமன்றங்களின் சபாஷ் தீர்ப்புகள்!
ADDED : பிப் 02, 2024 01:03 AM

உலக, தேசிய, தமிழக நிகழ்வுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
பி.ஜோசப், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'சட்டம் ஒரு இருட்டறை' என்றார், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. ஆனால், நடைமுறையில் பார்த்தால், சட்டம் மட்டும் இருட்டறை அல்ல. சில தீர்ப்பு களும் கூட, கும்மிருட்டாக, புரியாத புதிராக விளங்குவது தான் ஆச்சரியம்.
கேரளாவின், மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதேவி அறிவித்துள்ள குற்றவாளிகளுக்கான மரண தண்டனை தீர்ப்பு, பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளன.
கேரள பா.ஜ.,வின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலராக இருந்த ரஞ்சித் சீனிவாசன், 2021 டிசம்பர் 19ல் ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில், அவரது தாய், மனைவி, மகள் முன்னிலையில், எஸ்.டி.பி.ஐ., என்ற அமைப்பை சேர்ந்த, 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
அந்த அமைப்பைச் சேர்ந்த, 15 கொலையாளிகளுக்கும் மாவேலிக்கரை கூடுதல் அமர்வு நீதிபதி ஸ்ரீதேவி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மற்றொரு வழக்கில், கேரள மாநிலம், கஜானா பாறையில் ஏலத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த தம்பதியின், 15 வயது மகளை கூட்டு பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், சாமுவேல், சிவகுமார், சுகந்தன் ஆகிய மூவருக்கும் தலா, 90 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 40,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிச்சயம் பாராட்டுக்குரிய ஒரு தீர்ப்பு தான் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால், பக்கத்தில் இருக்கும் நம் தமிழகத்திலோ முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற கொலையாளிக்கு, கருணை அடிப்படையில் விடுதலை வழங்கியுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், சமீபத்தில் வெளியான கேரள நீதிமன்றங்களின் தீர்ப்புடன் ஒப்பிடுகையில், ஏதோ நெருடுகிறது.
நாட்டில் தண்டனைகள் கடுமையானால் தான், குற்றங்கள் குறையும்என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

