UPDATED : மார் 02, 2024 11:25 PM
ADDED : மார் 02, 2024 11:20 PM

க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தி.மு.க., முக்கிய நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், போதை பொருட்கள் கடத்துவதில், பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து, மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.
தி.மு.க., கூட்டணி அமைப்பது போல், கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கும், போதை பொருள் கும்பலுடன் கூட்டணி அமைத்து, போதை பொருட்களை வெளிநாடுகளுக்கு தொடர்ந்து கடத்தி வந்துள்ளார்.
அது மட்டுமின்றி, தமிழகத்திலும் தாராளமாக புழக்கத்தில் விட்டுள்ளனர். அதனால் தான், தமிழகத்தில் கல்லுாரி மாணவர்களில் இருந்து பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரும் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர்.
போதை பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் கூட்டணியில், இன்னும் பல பிரபலங்களும் இணைத்திருக்கலாமோ என்ற அச்சமும் உள்ளது. காரணம், தி.மு.க., முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், காவல் துறை உயர் அதிகாரிகள் பலருடன் ஜாபர் சாதிக் இருக்கும் படங்கள், சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருப்பது, இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
இவ்வளவு பெரிய போதை பொருட்களை கடத்துவதற்கு மேற்கூறியவர்கள் உடந்தையாக செயல்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அடிக்கடி போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, 'தமிழகத்தை போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என, உத்தரவு போட்டு கொண்டிருக்கிறார். ஆனால், அவரது கட்சியின் முன்னணி நிர்வாகியே, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது, தமிழக மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாபர் சாதிக்கை, தற்போது கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால், அது மட்டும் போதாது... தலைமறைவாக உள்ள அவரை விரைந்து கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை வாங்கி தந்தால் தான், தி.மு.க., அரசு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை பிறக்கும்.

