ADDED : ஜன 20, 2024 01:04 AM

எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்துடன், 'பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி' என்ற வாழ்த்து செய்தியை கவர்னர் ரவி வெளியிட்டது, தி.மு.க.,வினரை கொதிப்படைய செய்துள்ளது. கவர்னர் ரவிக்கு பதிலளிக்கும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது' என, கண்டித்துள்ளார்.
ஆனால், ஒருவர் மீது குறை சொல்லி குற்றம் சாட்டுவதற்கு முன், தங்களுக்கு அந்த தகுதி உள்ளதா என்று பல முறை சிந்தித்து தெளிந்த பின், குற்றம் கூறுவது தான் அறிவுடையோருக்கு அடையாளம். அதிலும் பொறுப்பான பதவியில் இருப்போர், ஓராயிரம் முறை சிந்தித்து தான் வார்த்தைகளை கூற வேண்டும்.
வள்ளுவருக்கு, 133 அடியில் ஒரு சிலையை நிறுவி, தலைநகரில் வள்ளுவர் பெயரில் ஒரு கோட்டமும் கட்டி வைத்து விட்டால் மட்டும், அவருக்கு புகழ் சேர்த்தது போலாகி விடுமா?
தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர்ந்து கோலோச்சிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், வள்ளுவர் வலியுறுத்திய வாழ்க்கை நெறிமுறைகளை, 1 சதவீதமாவது கடைப்பிடிக்கின்றனரா...? அவர்கள் மனசாட்சியை தொட்டு பதில் சொல்லட்டும்...
திருக்குறளில், கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில், 'நாட்டில் வாழும் குடிமக்களே, குடிக்கக் கூடாது' என்று வலியுறுத்தி, 10 குறள்களை எழுதியிருக்க, அவர் வழியில் நடப்பதாக கூறும் திராவிட மாடல் அரசு, தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, வியாபாரம் செய்து வருகிறது.
இப்போது சொல்லுங்கள்... வள்ளுவரையும், அவர் கூறிய கருத்துகளையும் கறைப்படுத்தி கொண்டிருப்பவர் கவர்னரா இல்லை முதல்வரா?
எனவே, அரசு நடத்தி கொண்டிருக்கும் மது விற்பனையை நிறுத்தி, தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மது தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தி, பின் வள்ளுவருக்கும், அவரது சிலைக்கும், அவர் பெயரில் அமைந்துள்ள கோட்டத்திற்கும் பெருமை சேருங்கள்.