இம்மாதம் 88,527 பிரசவங்கள் நல்லபடி நடக்க அரசு நடவடிக்கை
இம்மாதம் 88,527 பிரசவங்கள் நல்லபடி நடக்க அரசு நடவடிக்கை
ADDED : அக் 12, 2024 12:51 AM

சென்னை:''இந்த மாதத்தில், 88,527 பிரசவங்கள் நடக்க உள்ள நிலையில், பாதுகாப்பான குழந்தை பிறப்பை உறுதி செய்ய வேண்டும்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுஉள்ளார்.
தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 27,135; ஆரம்ப சுகாதார நிலையங்களில், 11,468 உட்பட, 88,527 பிரசவங்கள் இந்த மாதத்தில் நடைபெற உள்ளன.
இதில் குழந்தை பிறப்பின் பாதுகாப்பை, 100 சதவீதம் உறுதி செய்ய, மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர்களுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில், 1,000 பிறப்புகளுக்கு, எட்டு குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. அதேபோல், பிரசவ காலத்தில் ஒரு லட்சம் பெண்களில், 40 பேர் உயிரிழந்து வருகின்றனர்.
இதற்கு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.
இதுபோன்ற கர்ப்பிணியரை கண்டறிந்து, அவர்களை அனைத்து வசதிகளும் உடைய மருத்துவமனைகளுக்கு முன்கூட்டியே பரிந்துரை செய்ய வேண்டும்.
குறிப்பாக, பிரசவ தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்கள் முன் அல்லது வலி ஏற்படும்போது, திட்டமிடப்பட்ட மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிப்பது அவசியம்.
ஆபத்து இல்லாத கர்ப்பிணியர், மற்ற இடங்களில் பிரசவம் பார்த்துக் கொள்ளலாம். சில இடர்பாடுகள் இருப்பவர்களை முன்கூட்டியே அறிந்து, மருத்துவமனையை பரிந்துரை செய்ய வேண்டும்.
இந்த மாதத்தில் மட்டும், 88,527 பிரசவங்கள் நடக்க உள்ளன. இந்த பிரசவங்கள், 100 சதவீதம் பாதுகாப்புடன் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் வாயிலாக, கர்ப்ப கால உயிரிழப்பு கள் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.