ADDED : மார் 19, 2025 07:00 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 18) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
நேற்றைய போக்சோ
தொழிலாளி கைது
வேலுார், சத்துவாச்சாரியை சேர்ந்தவர் மூர்த்தி, 49; கூலித்தொழிலாளி. இவர், 7 வயது மாணவிக்கு நேற்று முன்தினம் சாக்லெட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி அழுது கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். வேலுார் மகளிர் போலீசார், மூர்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.
வாலிபர் சேட்டை
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, கந்தன்குடி சுப்ரமணியர் கோவில் அர்ச்சகர் வீட்டில் பெண் ஒருவர், ஓராண்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10ம் தேதி உடல்நிலை சரியில்லா ததால், பிளஸ் 2 படிக்கும் தன், 17 வயது மகளை அர்ச்சகர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அர்ச்சகர், கோவில் மடப்பள்ளி பாத்திரங்களை எடுத்து வரும்படி சிறுமியிடம் கூறியுள்ளார்.
சிறுமி கோவிலுக்கு சென்றபோது, அங்கு சாமி கும்பிட வந்த நெடுஞ்சேரியைச் சேர்ந்த ராமநாதன், 32, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தாயிடம் சிறுமி தெரிவித்தார். நன்னிலம் மகளிர் போலீசார் ராமநாதனை போக்சோவில் கைது செய்தனர்.
அத்துமீறியவர் கைது
பிராட்வேயில் இருந்து தி.நகர் செல்லும் தடம் எண்: 11 மாநகர பேருந்தில், சென்னை மாநிலக் கல்லுாரி மாணவியர் சிலர், ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இருந்து, நேற்று முன்தினம் மாலைஏறினர். அதில் பயணித்த ஆண் நபர் மாணவியரை இடித்து இடையூறுசெய்துள்ளார்.
அதில், ஒரு மாணவி அந்த நபரை தள்ளி நிற்கும்படி எச்சரித்துள்ளார். ஆத்திரமடைந்த நபர், மாணவியை ஆபாசமாக பேசியது மட்டுமல்லாமல் தகாத முறையில் நடந்துள்ளார்.
இந்த நிலையில், பேருந்து ஆனந்த் தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அந்த நபர் இறங்கி தப்ப முயன்றார். அப்போது, மாணவியர் சத்தம் போட்டனர். பொதுமக்கள் அந்த நபரை பிடித்து, ராயப்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தி.நகரைச் சேர்ந்த சையது அப்துல் ரஹ்மான், 40, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைதுசெய்தனர்.