ADDED : மார் 29, 2025 05:25 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 28) பலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
'போக்சோ' சட்டத்தில் பட்டதாரி கைது
நெல்லிக்குப்பம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொறியியல் பட்டதாரியை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். கடந்த 21 ஆம் தேதி நடந்து சென்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பிரசாந்த்,35; வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பிரசாந்தை நேற்று கைது செய்தனர்.
சிறுமிக்கு தொல்லை; முதியவர் கைது
கடலுார்: கடலுார் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன்,62; இவர் கடந்த 26ம் தேதி, வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமி அளித்த தகவலின் பேரில், நடந்த சம்பவம் குறித்து அவரது தாய் கடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, ஜனார்த்தனனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; தாத்தாவுக்கு போலீஸ் வலை
மேட்டுப்பாளையம்: பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தாத்தா முறை உறவினர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது பள்ளி சிறுமி. 50 வயது தாத்தா முறை உறவினரான ஒருவர், வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போது, அவரிடம் பழகும் விதம் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, நேற்று முன் தினம் சைல்டு ெஹல்ப் லைனுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள், சிறுமுகை போலீசாருடன் நேரில் சென்று சிறுமியிடம் விசாரித்தனர்.
விசாரணையில், சிறுமி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். தாத்தா முறை உறவினர், தன்னை மிரட்டி மூன்று முறை உடலுறவு வைத்துக் கொண்டார் என தெரிவித்தார். இதையடுத்து, மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் வருவதை அறிந்த தாத்தா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
17 வயது சிறுமி கர்ப்பம்
வேலுார்: வேலுாரை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் கரீம், 25, என்பவருக்கும் டிச., 15ல், திருமணம் நடந்தது. சிறுமி மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். சத்துவாச்சாரி போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கிய அப்துல் கரீம் மீது, போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
56 வயது சிற்பிக்கு சிறை
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், குப்பத்தை சேர்ந்தவர் முனிரத்தினம், 56; கோவில் சிலை வடிவமைக்கும் சிற்பி. அப்பகுதி கிராமத்தில், அம்மன் கோவிலில் புனரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், சிலை செதுக்கும் பணியில் முனிரத்தினம் ஈடுபட்டிருந்தார். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, 5 வயது சிறுமியிடம் சீண்டலில் ஈடுபட்டார். திருப்பத்துார் தாலுகா போலீசார் விசாரித்து, முனிரத்தினத்தை போக்சோவில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.