ADDED : மார் 30, 2025 07:31 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மார்ச் 29) பலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
சில்மிஷ எச்.எம்., தலைமறைவு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சுந்தரவிநாயகம், 50, தற்காலிக ஆசிரியர்களாக இருவர் பணிபுரிகின்றனர். சுந்தரவிநாயகம் தினமும் போதையில் பள்ளிக்கு வருவார்.
பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவியரை அழைத்து, மடி மீது அமரவைத்து மொபைல்போனில் ஆபாச படங்களை காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் கூறினார். பெற்றோர், செங்கம் வட்டாரக் கல்வி அலுவலர் ஷகிலாவிடம் புகார் கொடுத்தனர். விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டதால், சுந்தர விநாயகம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். செங்கம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சுந்தரவிநாயகத்தை தேடி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்
கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, அப்பகுதி பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவி, திடீரென மயங்கி விழுந்தார். அருகிலுள்ள மருத்துவமனையில் பரிசோதித்ததில், அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆலுவா போலீசார் விசாரணையில் மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய குன்னுக்கரையை சேர்ந்த கல்லுாரி மாணவர் என, தெரியவந்தது. அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காமுக வக்கீலுக்கு 'குண்டாஸ்'கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே முட்டைகாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவியரான இரண்டு சிறுமியர், 'இன்ஸ்டாகிராம்' காதலனை சந்திக்க இரவில் தனியாக சென்று கொண்டிருந்த போது, அவர்களை தன் அலுவலகத்திற்கு அழைத்து சென்று ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தக்கலையைச் சேர்ந்த வக்கீல் அஜித்குமார், 32, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று கலெக்டர் அழகு மீனா உத்தரவிட்டார். திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.