ADDED : ஏப் 13, 2025 07:48 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 12) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
தீயணைப்பு வீரர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா, 32. ஆரணி தீயணைப்பு நிலைய வீரர். இவர் 8ம் வகுப்பு மாணவிக்கு 'வாட்ஸாப்'பில் பாலியல் தகவல் அனுப்பினார். மாணவியின் தாய் புகாரின்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார், ராஜேஷ்கண்ணாவை போக்சோவில் கைது செய்தனர்.
முதியவர் சிக்கினார்
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி, 63. இவர், 5 வயது சிறுமிக்கு, சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். புகார் படி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், சுப்பிரமணியை போக்சோவில் கைது செய்தனர்.
மருத்துவமனை நிர்வாகி தலைமறைவு
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் பகுதியில் ஜாவித் என்பவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனை இயங்குகிறது. இங்கு, பயிற்சிக்காக வந்த நர்சிங் மாணவியிடம் ஜாவித், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியின் புகார் படி, தலைமறைவான ஜாவித்தை போலீசார் தேடி வருகின்றனர்.
மளிகைக்கடைக்காரர் மீது வழக்கு
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவி அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு, கடந்த 4ம் தேதி சென்றார். மளிகை கடையின் உரிமையாளர் அமுல்ராஜ், 55, என்பவர், அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 10ம் தேதி மாணவி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது, அமுல்ராஜின் நண்பர் முத்துக்குமார், 56, என்பவர் மாணவிக்கு ஆபாச சைகை காண்பித்ததாக கூறப்படுகிறது. மாணவி கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். அமுல்ராஜ், முத்துக்குமார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பக்கத்து வீட்டுக்காரர் சிக்கினார்
கோவை, தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார், 33. இவர் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டு இரண்டு குழந்தையை கொஞ்சுவது போல், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். குழந்தையின் பெற்றோர், அவரை கண்டித்தனர். கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். செல்வகுமார் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.