UPDATED : ஜூலை 16, 2025 08:04 AM
ADDED : ஜூலை 16, 2025 07:15 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 15) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
போலீஸ்காரர் சிக்கினார்
துாத்துக்குடி மாவட்டம், பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல், 27. சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்துார், ஆறுமுகநேரி மற்றும் சென்னை போலீஸ் ஸ்டேஷன்களில் போலீஸ்காரராக வேலை பார்த்தார். 2020ல் உறவினரான 15 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாய் திருச்செந்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ், எட்டு பிரிவுகளில் மிகாவேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர் மீது விதவை பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கியது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டிருந்த மிகாவேல், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மேலும் சில பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளதால், அதுதொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
போக்சோவில் டிரைவர் கைது
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே புன்னம் சத்திரம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் ஆசைதம்பி, 27, டிரைவர். திருமணமாகாதவர். இவர் கடந்த, 12ம் தேதி ஐந்து வயதுள்ள சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து, சிறுமியின் தாய், கரூர் மகளிர் ரூரல் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, ரூரல் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிந்து, ஆசைதம்பியை போக்சோ சட்டத்தின் கீழ், கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்தவர் சோலை முருகன் 23, டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் 2023 மே 22-ல் 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து சென்னைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சாத்துார் மகளிர் போலீசார் சோலை முருகனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் சோலை முருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.
சிறுமி பாலியல் பலாத்காரம்
திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியை, 2023ல் அதே பகுதியை சேர்ந்த ஜாகுபர் ஹுசைன், 55, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார்; சிறுமிக்கு குழந்தை பிறந்தது. ஜாகுபர் ஹுசைன் கைது செய்யப்பட்டார்.
அந்த வழக்கில், ஜாகுபர் ஹுசைனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், சிறுமிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கவும் திருநெல்வேலி போக்சோ கோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் நேற்று உத்தரவிட்டார்.