'உள்கட்சி தேர்தலில் நிற்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்'
'உள்கட்சி தேர்தலில் நிற்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்'
ADDED : டிச 03, 2024 03:34 AM

சென்னை : ''உள்கட்சி தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகள் நேர்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான், கட்சியின் எதிர்காலமும், நிர்வாகிகளின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
பிரிட்டன் சென்றிருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூன்று மாதங்களுக்கு பின், சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்திற்கு நேற்று காலை வந்தார். அவருக்கு, கட்சியினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
தற்போது இல்லை
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில், பிற்பகல் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், கட்சியின் தேசிய பொதுச் செயலர் தருண் சுக், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வரும், 5, 6, 9 ஆகிய தேதிகளில் மண்டல அளவிலும், 15ம் தேதி முதல் மாவட்ட அளவிலும் கட்சியின் அமைப்புக்கு தேர்தல் நடத்துவது என, முடிவு எடுக்கப்பட்டது.
பின், தருண் சுக் பேசும்போது, ''பல ஆண்டுகளாக தமிழக அரசியல் நிலவரத்தை பார்த்து வருகிறேன்; முன்பு இருந்த பா.ஜ., தற்போது இல்லை. மற்ற கட்சிகளைக் காட்டிலும் தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், ஓட்டு சதவீதமும் அதிகரித்துஉள்ளது.
''இது, கட்சிக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைத்த ஒவ்வொருவரின் வியர்வையாலும் விளைந்திருக்கிறது. இதற்காக பணியாற்றிய ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் பாராட்ட கடமைப் பட்டிருக்கிறேன்.
''கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரும் இதே வேகத்தில் பணியாற்றினால், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியை நிச்சயம் பிடிக்கும். வரும் 2026 சட்டசபை தேர்தல் நமக்கானதாக இருக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கிறோம்.
''அதை எக்காரணம் கொண்டும் தவறவிட்டுவிடக் கூடாது. தலைமை என்ன உத்தரவிடுகிறதோ, அதைப் பின்பற்றி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்,'' என்றார்.
பின், அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை, கடந்த ஆண்டுகளை விட தற்போது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது; கட்சி நிர்வாகிகள் அனைவரும் மக்களுடன் இணைந்து ஒன்றாக பணிபுரிய வேண்டும். மத்திய அரசின் ஏராளமான திட்டங்களும், பலன் களும் இன்றளவிலும் மக்களிடம் நேரடியாக சென்று சேராமல் உள்ளன.
அத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது, ஒவ்வொருவரின் கடமை. பா.ஜ., போன்ற தேசிய கட்சியில் பொறுப்பு கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. தற்போது உள்கட்சி தேர்தல் நடக்கிறது.
மேலிட முடிவு
அதை ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டு, நேர்மையான வழியில் பதவியை அடைய முயற்சிக்க வேண்டும். எனவே, உள்கட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேர்மையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான தற்போதைய கூட்டணி தொடரும்.
கூட்டணியில் உள்ள கட்சிகளுடன், நிர்வாகிகள் அரவணைத்து செல்ல வேண்டும். ஒருமித்த கருத்து உடையவர்கள் வர விரும்பினால், கூட்டணிக்கு வருவர்.
யார் யார் வருவர் என்பது தற்போது தெரியாது. கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்து, மேலிடம் முடிவு எடுக்கும். அதை பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.