கூகுள் வரைபடத்தை நம்பி ஒகேனக்கல் செல்வோர் ஏமாற்றம்
கூகுள் வரைபடத்தை நம்பி ஒகேனக்கல் செல்வோர் ஏமாற்றம்
ADDED : பிப் 18, 2024 02:34 AM

மேட்டூர் : சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பூங்காவுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். இவர்களில் பலரும், மொபைல் போனில் கூகுள் வரைபடத்தை பார்த்து பயணிக்கின்றனர்.
வரைபடத்தில் மேட்டூரில் இருந்து ஒகேனக்கல் செல்வதற்கு கொளத்துார், பண்ணவாடி, அணை நீர்ப்பரப்பு பகுதியின் மறுகரையில் உள்ள நாகமறை, பென்னாகரம் வழித்தடத்தை, குறைந்த துாரமாக கூகுள் காட்டுகிறது.
இதனால் கொளத்துார் வழியே பண்ணவாடி பரிசல்துறைக்கு கார்களில் செல்லும் சுற்றுலா பயணியர், அணை நீர்ப்பரப்பு பகுதி வரை செல்கின்றனர். அதன்பின் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் மீண்டும் மேட்டூர் திரும்புகின்றனர்.
பண்ணவாடி பரிசல் துறை மீனவர்கள் கூறியதாவது:
பண்ணவாடியில் இருந்து விசைப்படகில் இருசக்கர வாகனத்தில் நாகமறை சென்றால், அங்கிருந்து, 40 கி.மீ., துாரத்தில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்.
மேட்டூரில் இருந்து காரில் மேச்சேரி, பென்னாகரம் வழியாகவே ஒகேனக்கல் செல்ல முடியும். அதற்கு மேட்டூரில் இருந்து, 85 கி.மீ., செல்ல வேண்டும். ஆனால், கூகுள் வரைபடத்தை பார்த்து காரில் வரும் சுற்றுலா பயணியர், பண்ணவாடியை கடக்க முடியாமல் ஏமாற்றத்துடன் மீண்டும் மேட்டூர் சென்று அங்கிருந்து மேச்சேரி வழியே ஒகேனக்கல் செல்கின்றனர்.
இதனால், 50 கி.மீ., கூடுதலாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.