அதிமுக.,வை அழிக்க நினைப்பவர்கள் கரைந்து போய் விடுவர்: இ.பி.எஸ்., பதிலடி
அதிமுக.,வை அழிக்க நினைப்பவர்கள் கரைந்து போய் விடுவர்: இ.பி.எஸ்., பதிலடி
ADDED : ஏப் 13, 2024 06:04 PM

அரியலூர்: ‛‛ அ.தி.மு.க.,வை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு கரைந்து போய் விடுவார்கள் என்பது வரலாறு '' என அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
அரியலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: இந்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., காணாமல் போகும் என்று சிலர் பேசுகின்றனர். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் தான் இப்படி பேசுகின்றனர்.
அ.தி.மு.க.,வை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு கரைந்து போய் விடுவார்கள் என்பது தான் வரலாறு. அ.தி.முக.,வை யாரும் மிரட்ட முடியாது. எந்த பூச்சாண்டிக்கும் அ.தி.மு.க., பயப்படாது. எனவே, பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்; அ.தி.மு.க.,வை சீண்டிப் பார்த்தால், எதிர்வினை எப்படி இருக்கும் என்று தொண்டர்கள் பாடம் கற்றுக் கொடுப்பர். உழைப்பை நம்பி இருக்கும் கட்சி அ.தி.மு.க., தொண்டர்களால் ஆளப்படும் கட்சி அ.தி.மு.க.,
ஆட்சிக்கு வருவதற்கு முன் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை என ஸ்டாலின் கூறினார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் தகுதி வாய்ந்தோருக்கு மட்டும் என்கிறார். 70 லட்சம் மகளிருக்கு மட்டும் தான் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் 1.1.5 கோடி பேருக்கு வழங்கப்படுவதாக கூறுகின்றனர். அ.தி.மு.க., தொடர்ந்து 27 மாதங்கள் போராடியதால் தான், தி.மு.க., அரசு ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை தந்தது.
அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு இலவச பயணம் என்றனர். ஆட்சிக்கு வந்ததும் குறிப்பிட்ட பஸ்களில் மட்டும் இலவச பயணம் என்றனர். மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் என ஸ்டாலின் கூறுகிறார். ஆம் அவர்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால், எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்.
ஸ்டாலினுக்கு எப்போதும் அவரது குடும்பத்தை பற்றி தான் சிந்தனை. எப்போதும் குடும்பத்தை பற்றி சிந்திக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் இண்டியா கூட்டணியை ஏற்படுத்தி ஓட்டுக் கேட்கிறார். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

