'கஜானா காலியாக இருந்தாலும் முதல்வரின் சிந்தை காலியாகவில்லை!'
'கஜானா காலியாக இருந்தாலும் முதல்வரின் சிந்தை காலியாகவில்லை!'
ADDED : நவ 09, 2024 08:53 PM
சென்னை:''கஜானா காலியாக இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் சிந்தை காலியாகவில்லை,'' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், நிதியின்மை என்பது ஒருபுறம் இருந்தாலும், கஜானா காலி, களஞ்சியம் காலி என்றாலும், எங்களுடைய முதல்வரின் சிந்தை எப்போதும் காலியாகவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
மத்திய அரசு ஜி.எஸ்.டி., வருவாயில், மாநிலங்களுக்குத் தர வேண்டிய நிதிப்பகிர்வை உரிய வகையில் தமிழகத்துக்கு அளிக்காதபோதும், வெள்ள நிவாரண நிதியை ஒதுக்காத நிலையிலும், மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் பாதிக்காதவாறு, புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளை செம்மையாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
தேர்தல் உறுதிமொழியில் அளிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார். அதனால், இந்தியாவில் வலிமைமிகு தலைவர்கள் பட்டியலில், முதல் 10 பேரில் ஒருவராக திகழ்கிறார். அது அவருடைய அர்ப்பணிப்புகளுக்கு கிடைத்த சான்று.
நிதியின்மை என்பது ஒருபுறம் இருந்தாலும், முதல்வர் பொறுப்பேற்ற பின், விடியல் பயணம், மகளிர் உரிமத்தொகை உள்ளிட்டவைகளுக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்து, மக்களின் வாழ்க்கையில் இன்பத்தை உண்டாக்கி வருகிறார்.
சென்னை, கிண்டியில் அரசு பல்நோக்கு மருத்துவமனை, மதுரையில் நுாலகம், ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளிட்டவை, தி.மு.க., ஆட்சியில் நடந்த வேகமான பணிகளுக்கு சான்று. எதிர்க்கட்சிகள் என்ற தளம் இருக்கும்போது, இதுபோன்ற குறைகளை எதிர்கட்சிகளில் இருப்போர் சொல்லத்தான் செய்வர். ஆனால், எங்கள் பணி மக்கள் பணி; மக்களின் தேவைகளை நிறைவேற்றி தரக்கூடிய முதன்மையான முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்.
இவற்றை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இதற்கான விடை, 2026ல் மக்கள் அளிக்கப் போடும் ஓட்டு வாயிலாக தெரிந்துவிடும். தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடக்கிறது. அதனால், வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமருவார் ஸ்டாலின். இதை மக்களே செய்து காட்டுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.