தந்தை நிழலில் வளர்ந்த போன்சாய் செடி; சவுக்கு சங்கர் 'அட்டாக்' மீண்டும் ஆரம்பம்!
தந்தை நிழலில் வளர்ந்த போன்சாய் செடி; சவுக்கு சங்கர் 'அட்டாக்' மீண்டும் ஆரம்பம்!
UPDATED : செப் 25, 2024 08:41 PM
ADDED : செப் 25, 2024 08:27 PM

மதுரை: 'தந்தையின் நிழலில் வளர்ந்த போன்சாய் செடி தான் தமிழக முதல்வர் ஸ்டாலின்' என்று சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் கூறினார்.
பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குண்டர் தடுப்புச் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார். வழக்குகளில் ஜாமின் பெற்ற நிலையில், குண்டர் சட்ட கைதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அதேநேரத்தில், சங்கர் கஞ்சா வைத்து இருந்ததாகவும் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை காரணம் காட்டி, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக தேனி போலீசார் கைது செய்தனர்.
இதனை எதிர்த்து அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததுடன், அவருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால், உடனடியாக விடுதலை செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் பேசியதாவது: கோவை சிறையில் காவலர்கள் தாக்கியதில் எனக்கு வலது கையில் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வெளியே வந்த பிறகு, தி.மு.க., அரசை எதிர்த்து பேசக் கூடாது, தி.மு.க.,வுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதை நிபந்தனையாக வைத்தார்கள். இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் உங்களை விடுவிக்கிறோம், அப்படி ஏற்காவிட்டால், ஒரு வருடத்திற்கு சிறையில் இருந்து உங்களை விடுவிக்க மாட்டோம் என நெருக்கடி கொடுத்தனர்.
உண்மையை பேசப்போவதில் அஞ்சப்போவதில்லை என்று கூறியதால், விடியற் காலை 3 மணியளவில் புழல் சிறையில் இருந்த என்னை, அவசர அவசரமாக மதுரை சிறைக்கு அழைத்து வந்து 2வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் விமர்சனங்களைப் பார்த்து வளர்ந்தவர் அல்ல. தந்தையின் நிழலில் வளர்ந்த ஒரு போன்சாய் செடிதான் முதல்வர் ஸ்டாலின். பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதைப் போலத்தான் தி.மு.க.,வின் தலைவராகி உள்ளார்.
உண்மைகளை எடுத்துக் கூறியதால் தான் சவுக்கு மீடியாவின் வங்கிக்கணக்குகள், அலுவலகம், வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் உண்மைகள் எந்தவிதத்திலும் வெளியே வரக்கூடாது என்பதில், முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் மிக கவனமாக இருக்கின்றனர்.
அண்மையில் கள்ளக்குறிச்சியில் 66 பேர் உயிரிழந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பலர் வழக்கு போட்டிருப்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த 2003ல் டி.ஜி.பி., சங்கர் ஜிவால், தமிழகத்தில் மெத்தனால் சர்வ சாதாரணமாக கடத்தப்படுவதாகவும், இதனை தடுக்கவில்லை எனில், மரக்காணத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய சாவு சம்பவங்களைப் போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியாது என உள்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்; அந்தக் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சியில் 66 உயிர்கள் பறிபோயிருக்காது.
இது போன்ற உண்மைகளை மறைக்க வேண்டும் என்பதற்காகத் தான் சவுக்கு மீடியா முடக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் மீது பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த வராகி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை குறித்து இதுவரை வெளியில் தெரிவிக்கப்படவில்லை. அவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
சவுக்கு மீடியாவுக்கு ஏற்பட்ட நிலைமை, ஊடகங்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். 5 மாதம் சிறையில் இருந்தாலும், முன் இருந்த வீரியத்துடன் மீண்டும் செயல்படுவேன். கோவை சிறையில் என்னுடைய கை உடைக்கப்பட்டது. தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் துளியும் இல்லை.
பத்திரிகையாளர் என்று அடையாளப்படுத்திக் கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவரது மகன் ஸ்டாலின் பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதில் முன்னணியில் இருக்கிறார். திராவிட மாடல் ஆட்சி என்ற இந்த சாபக்கேடு எப்போது முடியும் என்று மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான நாள் விரைவில் வரும்.இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.