ராகுலுக்கு மிரட்டல் விடுப்பதா? பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ராகுலுக்கு மிரட்டல் விடுப்பதா? பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : செப் 18, 2024 11:59 AM

சென்னை: லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ., நிர்வாகி தர்விந்தர் சிங் மார்வா மீது நடவடிக்கை கோரி, டில்லி துக்ளக் சாலை போலீஸ் ஸ்டேஷனில் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., நிர்வாகி தர்விந்தர் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுவை தேர்தல் கமிஷனுக்கும் காங்கிரஸ் அனுப்பி உள்ளது.
முதல்வர் கண்டனம்!
இந்நிலையில், சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ''லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்திராவுக்கு நேர்ந்தது தான் ராகுலுக்கு நடக்கும் என பா.ஜ.,வினர் மிரட்டியது கண்டிக்கத்தக்கது.
ராகுல் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு என்று சிவசேனா எம்.எல்.ஏ., கூறியதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். மக்கள் மத்தியில், எனது தம்பி ராகுலுக்கான ஆதரவு அதிகரித்தது சிலரை நிலைகுலையச் செய்துள்ளது. ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.