மிளகாய் மூட்டைகளில் ரூ.4.25 கோடி கஞ்சா கடத்திய மூன்று பேர் சிக்கினர்
மிளகாய் மூட்டைகளில் ரூ.4.25 கோடி கஞ்சா கடத்திய மூன்று பேர் சிக்கினர்
ADDED : டிச 03, 2024 11:59 PM

சென்னை:ஒடிசாவில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னைக்கு கன்டெய்னரில் மிளகாய் மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட, 4.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 848 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது; மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒடிசா மாநில எல்லையில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னைக்கு கன்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை மண்டல இயக்குனர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது தலைமையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், செங்குன்றம் அடுத்த நல்லுார் சுங்கச் சாவடியில், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த கன்டெய்னர் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், மிளகாய் மூட்டைகள் இருந்தன. அவற்றை சோதனை செய்த போது, மிளகாய் மூட்டைக்கு நடுவில், கஞ்சா பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
மிளகாய் மூட்டைகளில், 396 பாக்கெட்டுகளில் இருந்த, 848 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 4.25 கோடி ரூபாய்.
கன்டெய்னர் லாரியில் வந்த, திருச்சியை சேர்ந்த சிவஞானம், திருவண்ணாமலை பார்த்தசாரதி, திண்டுக்கல் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் போதை கும்பலிடம் இருந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள, டோல்கேட் அருகே கஞ்சா பாக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளனர். இவர்கள் பின்னணி குறித்து, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.