மூன்று கோரிக்கைகள் ஏற்பு: போக்குவரத்து ஊழியர்கள் 62 நாள் போராட்டம் வாபஸ்
மூன்று கோரிக்கைகள் ஏற்பு: போக்குவரத்து ஊழியர்கள் 62 நாள் போராட்டம் வாபஸ்
ADDED : அக் 19, 2025 01:43 AM

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்த நிலுவை தொகை வழங்குவது உள்ளிட்ட, மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, அமைச்சர் சிவசங்கர் வாக்குறுதி அளித்ததை அடுத்து, 62 நாட்களாக, சி.ஐ.டி.யு., நடத்தி வந்த போராட்டம் நேற் று முடிவுக்கு வந்தது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு, 15வது புதிய ஒப்பந்த நிலுவை தொகை வழங்க வேண்டும்; ஓய்வு கால பலன்களை உடனே வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், கடந்த ஆக., 18 முதல் தமிழகத்தில் 22 இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என, தினமும் 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வந்தனர். போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சண்முகம் உட்பட பலரும் முதல்வரிடம் வலியுறுத்தினர்.
இதற்கிடையே, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருடன் நடந்த பேச்சில், சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலர் ஆறுமுகநயினார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இது குறித்து, சி.ஐ.டி.யு., தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி:
அமைச்சருடன் நடந்த பேச்சில் விரிவாக பேசினோம். 'ஓய்வுபெற்ற 1,200 ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 2,500 கோடி ரூபாய், இரண்டு தவணை களில் வரும் பொங்கலுக்கு முன் வழங்கப்படும். 15வது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை முதல் தவணை விரைவில் வழங்கப்படும்.
'ஓய்வூதியர்களுக்கான காப்பீடு வசதி கொண்டு வரப்படும்' என, அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்பி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

