ADDED : பிப் 19, 2024 04:17 AM

பீஹாரில் பேகுசராய் மாவட்டத்தின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் உமேஷ் யாதவ். இவருக்கு ராஜேஷ் யாதவ் என்ற மகனும், நீலு குமாரி, 25, என்ற மகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், நீலு குமாரியை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். எனினும், நீலு குமாரியை மணமகனின் பெற்றோர் ஏற்காததால், தன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நீலு குமாரி, தன் தந்தை உமேஷ் யாதவ், சகோதரர் ராஜேஷ் ஆகியோருடன் தன் மாமனார் வீட்டிற்கு சென்றார். அப்போது இவர்களை பார்த்ததும் ஆத்திரமடைந்த மாமனார், துப்பாக்கியால் அவர்களை சுட்டுவிட்டு தப்பி ஓடினார். இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் இறந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான நீலு குமாரியின் மாமனாரை தேடி வருவதுடன், எதற்காக அவர் மூன்று பேரையும் சுட்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நக்சல் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் பலி
சத்தீஸ்கரில், பிஜாப்பூர் மாவட்டத்தில் ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த திஜாவு ராம் பவுரியா நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஆயுதங்களுடன் வந்த நக்சல் அமைப்பினர் சிலர், அவரை கோடாரியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில், பவுரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நக்சல் தாக்குதலில், பாதுகாப்பு படை வீரரின் தலை துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற நக்சல் அமைப்பினரை, பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடன் தகராறில் பைனான்சியர் கொலை
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் பைனான்சியரை கத்தியால் குத்தி கொலை செய்து, நகையை திருடிச் சென்ற ஜெயதீபா 40, கள்ளக்காதலன் முத்துமணி 31,யை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.ஐ., டூவீலர் சாவியை பறித்து தப்பிய போதை ஆசாமிகள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று காலை 10:30 மணிக்கு போக்குவரத்து எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் பஞ்சு மார்க்கெட் அருகே பணியில் இருந்த போது பங்க் அருகே உள்ள மதுக்கடையில் இருந்து ஒரே டூவீலரில் இருவர் வந்தனர்.
தாமரைக்கண்ணன் அவர்களை நிறுத்த முயன்று டூவீலரில் விரட்டி சென்றார். அவர்களை மறித்து நிறுத்தி குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தெரிந்து தப்பிக்க முடியாதபடி அவர்களது டூவீலரின் சாவியை எடுத்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் அவரது கையில் இருந்த தங்கள் டூவீலரின் சாவியை பிடுங்கி கொண்டு தாமரைக்கண்ணனின் டூவீலர் சாவியையும் எடுத்துக்கொண்டு தப்பினர். இதில் அவரது விரலில் வெட்டு காயம் ஏற்பட்டது. போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இரட்டிப்பு லாபம் ஆசை காட்டி ரூ.6 லட்சம் பறிப்பு
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 30; பட்டதாரி வாலிபர். இவரது, 'வாட்ஸாப்'புக்கு பணத்தை முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக ஒரு 'லிங்க்' வந்தது. அதை பதிவிறக்கம் செய்த மகேஷ், அதில் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 6.53 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். உடனடி லாபம் எனக்கூறி, 43,000 ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்ந்தது.
அதன்பிறகு பணத்தை பெற்றவர்களிடம் எந்த தகவலும் வரவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில், 6.09 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, மகேஷ் அளித்த புகாரின்படி, வேலுார் 'சைபர் கிரைம்' போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி குத்திக்கொலை
திருவண்ணாமலை அடுத்த மாதலம்பாடியைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன், 65. இவரது அண்ணன் சக்கரை, 70. இருவருக்கும் அப்பகுதியில், 3 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இருவருக்கும் உரிமையுள்ள பொதுவான கிணற்றிலிருந்து, நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக, நீண்ட காலமாக பிரச்னை உள்ளது.
நேற்று முன்தினம் மாலை, குடும்பத்தினருடன் மணிலா அறுவடையில் கண்ணன் ஈடுபட்டிருந்தார். சக்கரை, அவரது மகன்கள் ஞானசேகர், செல்வமணி ஆகியோர் அங்கு வந்தனர். 'தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், மணிலா பறிக்க எப்படி தண்ணீர் பாய்ச்சலாம்?' எனக்கேட்டு மூவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, மூவரும் சேர்ந்து கத்தியால் குத்தியதில், கண்ணன் உயிரிழந்தார். மங்கலம் போலீசார், ஞானசேகர், செல்வமணியை கைது செய்து, தப்பிய சக்கரையை தேடி வருகின்றனர்.
போலி டாக்டர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பொக்கசமுத்திரம் கிராமத்தில், மருத்துவம் படிக்காமல், ஒருவர் கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்தது. அதன்படி, வெம்பாக்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சுரேஷ்பாபு தலைமையிலான குழுவினர், பொக்கசமுத்திரம் கிராமத்தில் நேற்று சோதனை நடத்தினர்.
இதில், டிப்ளமோ பார்மசி படித்த விஸ்வநாதன், 49, கிளினிக் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. அவரிடம் ஆங்கில மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். பிரம்மதேசம் போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர்.
இழப்பீடு கிடைக்காததால் விவசாயி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் விவசாயி விஜயபாண்டியன் 73. இவருக்கு சொந்தமான 20 ஏக்கரில் நெல், வாழை பயிரிட்டிருந்தார். கடந்தாண்டு டிச., 17, 18 ல் பெய்த அதி கனமழையால் குளங்கள் உடைத்து நிலம் முழுவதும் மண் சேர்ந்து நெல், வாழை பாதிக்கப்பட்டன. உடைந்த பெட்டை குளத்தை சீரமைக்க இவர் செலவும் செய்துள்ளார். அரசு பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு வழங்குவதாக அறிவித்த இழப்பீட்டுத் தொகை இன்னும் இவருக்கு வழங்கப்படவில்லை. நிலத்தை சீரமைத்து மீண்டும் விவசாயம் செய்வதில் இவருக்கு சிக்கல் ஏற்பட்டது.
மனமுடைந்த அவர் விவசாயத்திற்கு பயன்படும் களைக்கொல்லி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விஜயபாண்டியன் குடும்பத்தினர் உள்ளிட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

