ADDED : ஏப் 10, 2025 04:59 AM
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர், பாகேபள்ளி தாலுகா, குட்டமிடபல்யா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடசாமி, 48. கால்நடை விவசாயி. 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வருவார்.
நேற்று ஆடுகளை மேய்ச்சல் முடிந்து, கொட்டகைக்கு அழைத்து வந்தார். அப்போது, கூட்டமாக வந்த ஆறு தெரு நாய்கள், ஆடுகளை கடிக்க துவங்கின. ஆடுகள் சிதறி ஓடத் துவங்கின. இதை பார்த்த வெங்கடசாமி, நாய்களை கல்லால் அடித்து விரட்டுவதற்கு முயற்சித்தார்.
ஆனால், நாய்கள் ஆக்ரோஷமாக ஆடுகளை கடித்தன. இதில் மூன்று ஆடுகள் உயிரிழந்தன. சில ஆடுகளுக்கு காயங்கள் ஏற்பட்டன. இதை பார்த்த அப்பகுதியினர் தெரு நாய்களை விரட்டினர்.
இதுகுறித்து படாபல்யா கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் வெங்கடேஷ், தெரு நாய்களுக்கு வெறி பிடித்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். தெரு நாய்களின் அட்டகாசங்கள் தாங்க முடியவில்லை எனவும், இதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பொதுமக்கள் கூறி உள்ளனர்.