ADDED : அக் 03, 2025 04:02 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, ஒவ்வொரு தொகுதிக்கும் தலா மூன்று பேரை பொறுப்பாளர்களாக நியமிக்க, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது.
அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., 40 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதேசமயம், அ.தி.மு.க., 25 தொகுதிகளை ஒதுக்க விரும்புகிறது.
சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ., பொறுப்பாளராக, அக்கட்சியின் தேசிய துணைத் தலைவரும், எம்.பி.,யுமான பைஜெயந்த் பாண்டா; இணை பொறுப்பாளராக, மத்திய இணை அமைச்சர் முரளிதர் மோகல் ஆகியோரை, தேசிய தலைவர் நட்டா சமீபத்தில் நியமித்துள்ளார்.
இதை தொடர்ந்து, மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் இணைந்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள, அனைத்து தொகுதிகளுக்கும் பா.ஜ.,வில் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுவரை, ஒரு தொகுதிக்கு ஒரு பொறுப்பாளர் வீதம் தான் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்படும் நபர்கள் தன்னையே வேட்பாளராக கட்சி மேலிடம் நியமிக்கும் என்று நிர்வாகிகள், தொண்டர்களிடம் தெரிவித்து, தங்களை முன்னிலைப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்; வசூலிலும் இறங்குகின்றனர்.
மேலும், கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து, சொந்த கட்சியினரையும் மதிக்காமல் இருப்பதுடன், எதிர் அணியினருடன் மறைமுகமாக நெருக்கம் காட்டுவதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே, வரும் சட்டசபை தேர்தலுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும், ஒருவருக்கு பதிலாக தலா மூன்று பேரை பொறுப்பாளர்களாக நியமிக்க, மாநில தலைமை முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, 'நான் தான் வேட்பாளர்' என்று யாரும் தன்னை முன்னிலைப்படுத்த முடியாது; கலெக் ஷனில் ஈடுபட முடியாது.
ஒருவரே தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. மூவரும் சேர்ந்து, கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுப்பர். எனவே, தேர்தல் பணியில் மட்டுமின்றி, கட்சி பணியிலும் மூவரும் போட்டி போட்டு செயல்படுவர்.
இப்படியொரு திட்டம் மேலிடத்தில் இருந்தாலும், அப்படி செய்யும்பட்சத்தில், ஒருவருக்கு பதில் மூவர் தனித் தனியாக கலெக் ஷனில் ஈடுபட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

