மைக் முன் புலி; மற்ற இடத்தில் எலி; சீமான் பற்றி டி.ஐ.ஜி., வருண்குமார் விமர்சனம்
மைக் முன் புலி; மற்ற இடத்தில் எலி; சீமான் பற்றி டி.ஐ.ஜி., வருண்குமார் விமர்சனம்
ADDED : டிச 30, 2024 09:22 PM

திருச்சி: தன்னிடம் மன்னிப்பு கேட்க தொழிலதிபர் ஒருவரை சீமான் அனுப்பியதாகவும், அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண் குமார் தெரிவித்துள்ளார்.
நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னைப்பற்றி அவதூறு பேசியதாக திருச்சி சரக டி.ஐ.ஜி., வருண் குமார் வழக்குத் தொடுத்திருந்த நிலையில், வழக்கு குறித்த விசாரணைக்கு இன்று வருண் குமார் திருச்சி கோர்ட்டில் ஆஜரானார்.
விசாரணைக்குப் பின் வருண் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரச்னை குறித்து இதுவரை நான் பேசவில்லை. ஒருவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இது நான் தனிப்பட்ட முறையில் முன்னெடுத்திருக்கும் வழக்கு. இதனை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளேன். இதற்கும் என் பதவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நா.த.க., சீமானுக்கும் எனக்கும் பிரச்னை கடந்த 2021ல் ஆரம்பித்தது. நான் திருவள்ளூர் எஸ்.பி.,யாக இருந்த போது, யூடியூபில் சாட்டை துரைமுருகன் என்பவர் தவறான தகவலைக் கொடுத்தார். அதனால் பெங்களூர்-சென்னை சாலையில் போராட்டம் நடைபெற்றது. போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், சாட்டை துரைமுருகனை கைது செய்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தோம். அதன் பிறகு நான் திருச்சிக்கு பணி மாறுதலாகி வந்துவிட்டேன்.
அப்போது சாட்டை துரைமுருகன் மீது மீண்டும் புகார் வந்தது. அதனடிப்படையில் அவரை கைது செய்தோம். பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் என்னை மிகவும் தரக்குறைவாகவும், அவசியமில்லாமலும், முகாந்திரம் இல்லாமலும் பேசினார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தனது கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுக்கும் போலீஸ் அதிகாரியை இப்படித்தான் தாக்குவேன் என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் சீமான் சொல்ல நினைத்தார்.
எனது பணியைத்தான் செய்தேன். ஆனால், சீமான் என்னை மிரட்டிப்பார்க்க நினைத்தார். இதற்கு பயப்படும் ஆள் நான் இல்லை. ஆனால், சீமான் வைத்த பொய்க் குற்றச்சாட்டு எனக்கு வருத்தமாக இருந்தது. நம்மையே இப்படி மிரட்டும் போது ஒரு சாதாரண போலீஸ்காரர் இதனை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எனது மனைவியிடம் பேசினேன்.
தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் தனிப்பட்ட முறையில் ஒரு அதிகாரியைத் தாக்குவதோ, குடும்பத்தைச் சீண்டுவதோ கிடையாது. இதனை சீமானும், அவரது கட்சியினரும் தான் செய்கின்றனர்.
இதன்பிறகு, தன் குடும்பம் குறித்தும் அவதூறு பரப்பியதாகவும், தாக்கியதாகவும் சீமான் பேசினார். அப்படிப் பேசியவர்கள் மீது சீமான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இதே போல் நீங்களும் கடந்து போக வேண்டும் என்று என்னைச் சொல்கிறார். அவர் சுயமரியாதையை விட்டுவிட்டு செயல்படுகிறார் என்றால் நானும் அப்படிச் செல்ல வேண்டும் என்று அவசியம் இல்லை.
என் குடும்பம் குறித்து அவதூறு பேசியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறேன். எடுப்பேன். இது கிரிமினல் வழக்கு. அடுத்து சிவில் வழக்கைத் தொடர உள்ளேன். அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்போகிறேன். தேவைப்பட்டால் நான் ஓய்வுபெற்ற பிறகும் இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்வேன்.
ஏனென்றால், சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன் நான். எனது சொந்த ஊர் ராமநாதபுரம். என் தந்தை திருச்சியில் பேராசிரியரக பணி புரிந்ததால், நான் வளர்ந்தது திருச்சியில். எனது குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மன்.
என்னைப் பார்த்து இவர் தமிழனா? இவர் தாய்மொழி தமிழா? என்று கேட்கிறார் சீமான். யாருடைய தாய்மொழி என்ன? யார் எந்த ஊரிலிருந்து வந்தார்கள்? என்று கேட்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது?
சட்டையைக் கழற்றிவைத்துவிட்டு வா என்கிறார். இந்த சட்டைக்காக தவம் கிடந்து படித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 36 மணி நேரம் கூட படிக்கிற சூழ்நிலை இருந்திருக்கிறது. அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கின பதவியை, சாதாரணமாகச் சொல்கிறர். அவர் பேசிய பேச்சுக்கு, இந்த சட்டையைப் போட்டுக்கொண்டு, கோர்ட்டில் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன்.
வீட்டில் எலி, வெளியிலே புலி என்பதைப் போல, சீமான் மைக் முன் புலி மற்ற இடத்தில் எலி என்று கூறலாம். ஏனென்றால், தனிமையில் வந்து மன்னிப்பு கேட்பதாக ஒரு தொழிலதிபர் மூலம் தூது அனுப்பினார். அதனை மறுத்த நான், பொதுவெளியில் கூறச்சொன்னேன்.
ஒரு பெண் போலீஸ் எஸ்.பி.,யை ஆபாசமாக சித்தரித்துள்ளனர். என் குழந்தைகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து, அவர்களையும் சித்தரித்துள்ளனர். இன்றும் அந்த படம் இணையத்தில் உள்ளது.
ஒரு கட்சித்தலைவர் இதனைக் கண்டிருத்திருக்க வேண்டும். ஆனால் பொறுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். என் கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். கைது செய்யப்பட்டவர்கள் சீமானின் கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள். அவர்களை நா.த.க., வழக்கறிஞர்கள் தான் ஜாமினில் எடுத்தனர்.
அவர்களை தனது யூடியூப் சேனலில் பேட்டி எடுத்த சாட்டை துரைமுருகன், கட்சிக்கு சம்பந்தமே இல்லை என்கிறார். ஆனால், அந்த நபர்கள் வாழ்வதே கட்சி அலுவலகத்தில் தான்.
சம்பந்தமே இல்லாமல் கனடாவிலும், சிங்கப்பூரிலும் இருந்து என்னைப்பற்றி சிலர் எழுதுவது சீமானின் தூண்டுதலின் பேரில் தான். அதற்கான ஆதாரங்களை திருச்சி மாநகர போலீசில் கொடுத்துள்ளோம்.
மைக்கை பிடித்தால் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. நாகரிகம் வேண்டும். நா.த.க.,வினர் இதே வேலையாக உள்ளனர். நான் பல மாவட்டங்களில் பணியாற்றி, பல்வேறு அரசியல் கட்சியினருடன் பேசியுள்ளேன். என்னுடைய தன்மையைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். இவரிடம் மட்டும் எனக்கு தனிப்பட்ட பகையா? இல்லை.
சீமானும், அவரது கட்சிக்காரர்களும் செய்தது தவறு. யாரோ ஒருவர் அவதூறு பதிவிடுகிறார்கள் என்றால் குறைந்தபட்சம் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடுவீர்களே என்று பகிரங்கமாக மிரட்டுகிறார். என்ன செய்துவிடுவீர்கள்? ஜாதி ரீதியாக நடந்துகொள்வதாகவும் கூறி அவதூறு பேசினார். இதுவரை யாரும் என்னை அப்படிச் சொன்னதில்லை.
இவர் ஆட்கள் மீது நடவடிக்கை எடுத்த ஒரே காரணத்திற்காக காழ்ப்புணர்ச்சியால் என்னைப் பழிவாங்க இதையெல்லாம் செய்கிறார். இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க நினைத்தால் கோர்ட்டில் அதைத் தெரிவிக்கட்டும்.
எனக்கு டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குடும்பமாகக் கொண்டாட வேண்டிய நாளில் கோர்ட்டில் நிற்கிறேன். இந்த அவதூறு பரப்பும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இங்கு நிற்கிறேன்.
சீமானின் நிலைப்பாடு எப்போதும் பொய்யும், குழப்பமுமாகவே உள்ளது. மைக் முன் பேசினால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார். அவருக்கு கோர்ட்டில் சரியான தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு வருண் குமார் கூறினார்.