அரசு நிலங்கள் அபகரிப்பதை தடுக்க பத்திரப்பதிவில் கிடுக்கிப்பிடி: பதிவுத்துறை அதிரடி
அரசு நிலங்கள் அபகரிப்பதை தடுக்க பத்திரப்பதிவில் கிடுக்கிப்பிடி: பதிவுத்துறை அதிரடி
UPDATED : ஜூன் 12, 2025 01:58 AM
ADDED : ஜூன் 12, 2025 01:44 AM

சென்னை: நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களை, தனியார் பெயரில் பதிவு செய்வதை தடுக்க, புதிய வழிமுறையை பதிவுத் துறை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, பல்வேறு வழக்குகளில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன. இந்த உத்தரவுகளை அமல்படுத்துவதில், அதிகாரிகள் நிலையில் தயக்கம் காணப்படுகிறது.
இதில், பல இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் பெயரில், அரசு புறம்போக்கு நிலங்களை பதிவு செய்து கொள்கின்றனர். இது மட்டுமல்லாது, கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரிய நிலங்களும் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
நீர்நிலை புறம்போக்கு, கோவில் நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பில், தனி அடையாள குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவுத் துறை அதிகாரிகள், இதுபோன்ற 'சர்வே' எண்களுக்கு வழிகாட்டி மதிப்புகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதில், அரசு நிலங்களை, தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க, புதிய வழிமுறையை, பதிவுத் துறை கடைப்பிடிக்க துவங்கிஉள்ளது.
இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்களை பயன்படுத்தி, தனியார் அபகரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, அரசு நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பு நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, பத்திரப்பதிவுக்காக இணையதளத்தில், சொத்தின் சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பில் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணை உள்ளீடு செய்யும்போது, அது அரசு சார்ந்த நிலமாக இருந்தால், பத்திரப்பதிவு தொடர்பாக அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாது. இதனால், பத்திரப்பதிவுக்கான 'டோக்கன்' பெறும் முன்பே தடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முறையான தனியார் நிலமாக இருந்தால் மட்டுமே, பத்திரப்பதிவுக்கான டோக்கன் கிடைக்கும். இதனால், அரசு நிலங்கள் அபகரிப்பு தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.