UPDATED : நவ 19, 2012 10:46 AM
ADDED : நவ 19, 2012 10:27 AM
மதுரை: திண்டுக்கல் பழனி இடையே புதிதாக போடப்பட்ட அகல ரயில்பாதையில் ரயில்கள் செல்லும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை கோட்ட மேலாளர் அஜய்காந்த் ரஸ்தோகி வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் பழனி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து நாளை (நவம்பர் 20) துவங்குகிறது. பகல் 1 மணிக்கு இதற்கான துவக்க விழா நடக்கும். முதல் ரயில் (56774) திண்டுக்கலில் இருந்து பகல் 1 மணிக்கு புறப்பட்ட பகல் 2.30க்கு பழனி சென்றடையும். தொடர்ந்து திண்டுக்கலில் இருந்து மாலை 5.30க்கு புறப்படும் ரயில் இரவு 7 மணிக்கு பழனி சென்றடையும். மறு மார்க்கத்தில் (56773) பழனியிலிருந்து மாலை 3.15 மணி, இரவு 7.45 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கலுக்கு முறையே, மாலை 4.45, இரவு 8.30 மணிக்கு வந்து சேரும். அடுத்தநாள் புதன்கிழமை திண்டுக்கலில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு 6.45 மணிக்கு பழனி சென்றடையும். இதே போல், காலை 8 மணிக்கு பழனியிலிருந்து புறப்படும் ரயில் 9.30 மணிக்கு திண்டுக்கல் வந்தடையும். இந்த ரயில் அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.