சாத்தான்குளம் கொலை வழக்கு; வாக்குமூலம் தாக்கல் செய்ய அவகாசம்
சாத்தான்குளம் கொலை வழக்கு; வாக்குமூலம் தாக்கல் செய்ய அவகாசம்
ADDED : ஏப் 10, 2025 01:19 AM
மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், மகன் பென்னிக்ைஸ போலீசார் 2020 ஜூன் 19ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ., கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
ஸ்ரீதர் ஏற்கனவே தாக்கல் செய்த ஜாமின் மனுவை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. மீண்டும் அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி ஆர்.சக்திவேல் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் விசாரணையின்போது ஆஜராகி வாதிடுகிறார். அவரது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு சிறையில் கணினி மூலம் தட்டச்சு செய்யும் வசதி இல்லை. மனுதாரருக்கு 3 மாதம் இடைக்கால ஜாமின் அனுமதிக்க வேண்டும்.
சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர்: விசாரணையை 2 மாதங்களில் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நடந்து கொள்கின்றனர். ஜாமின் அனுமதித்தால் சாட்சிகளை கலைக்கக்கூடும். விசாரணையை பாதிக்கும். ஜாமின் அனுமதிக்கக்கூடாது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: மனுதாரர் தாக்குதலில் ஈடுபடவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதை தாக்கல் செய்ய அவகாசம் தேவை. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி ஏப்.22க்கு ஒத்திவைத்தார்.